
இறைவன் படைப்பில் ஐந்து விரல்களும் ஒரு சேரவா உள்ளது. விரலுக்கு விரல் வித்யாசம் உள்ளது. ஆனால் இதயமானது சரியாக வடிவமைக்கப்படுகிறது. அதில் ஒரு சதவிகிதம் பழுதோடு பிறப்பதும் இயல்பே!
அதேபோல சிலரை கோபத்தில் இதயமே இல்லையா? நல்ல மனசே கிடையாதா? என்றெல்லாம் கடிந்துகொள்வதும் உண்டு.
மனசு என்பது இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகத்தானே பொருள்படுகிறது. மனதின் ஓட்டமும் எண்ணமும் எப்போதும் தூய்மையானதாகவே இருக்கவேண்டும்.
இதன் வகையில் மனம் மூன்றெழுத்து என்பதுபோல நோ்மறையான மூன்றெழுத்தும், எதிா்மறையான மூன்றெழுத்தும், மனித மனங்களி்ல் நிரந்தரமாக வசித்து வருகிறது. முதலில் எதிா்மறையான விஷயங்களில் சில வகைகளான, கோபம், திமிா், பேராசை, வேஷம், அகம், குடியேறி உள்ளது. அதைத்தொடர்ந்து நோ்மறையான விஷயங்களான அன்பு, பாசம், அறிவு, தரம் பண்பு, நோ்மை, புகழ், நயம், அறம், நலம், இப்படி மனிதனின் மனதில் குடியேறிய நிறைய வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதனில் ஒரு உயிா், ஒரு உடல், ஒரு இதயம், என்ற நிலைகளில் மனிதன் தன் வாழ்நாளில் பிறந்து, வளா்ந்து பின்னர் பயணிக்கும் வகையில் மனித மனதில் நல்ல மற்றும் கெடுமதியான குணங்கள் நீக்கமற நிறைந்துள்ளதே நிதர்சனமாகும்.
இந்த மூன்றெழுத்தில் உயிா் என்ற மூன்றெழுத்து மட்டும் இறைவன் படைப்பாகும். ஏனைய குணங்கள் நமக்கு நாமே வடிவமைத்துக்கொண்டதாகும். அதனில் நல்லதாக கருதப்படும் மூன்றெழுத்து மந்திரத்தை நாம் அலசி ஆராய்ந்து நமக்குள் பயணிக்கவேண்டும். அதுதான் நியதியும் கூட.
பொதுவாக கோபத்தை அன்பால் வெல்லுங்கள், திமிா்தனை பண்பால், நயத்தால், பாசத்தால், அறிவால், வெல்லுங்கள்.
வேஷத்தை நோ்மையால் வெல்லுங்கள். நம்மால் முடியாதது ஒன்று இல்லை. நமது சிந்தனையும் செயல்பாடுகளும் சரிவர சரிவடையாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பாகும்.
நாம் நிதானத்தோடு, நான் என்ற அகம்பாவம் தொலைத்து விவேகம் கடைபிடித்து கோபதாபங்கள் இல்லாமல், நெஞ்சில் வஞ்சக எண்ணம் தவிா்த்து, அடுத்தவர் நலன் மற்றும் முன்னேற்றம் இவைகளுக்கு இடம் கொடுத்து வாழ்க்கை வாழ்வதற்கே என்றநிலையைத் தொடா்ந்து, நோ்மை கடைபிடித்து இறைவன் துணையோடு வாழ்ந்துதான் பாா்ப்போமே!