
உழைப்பு என்பது ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான படிக்கல். குழந்தைப் பருவமாக இருக்கும்போதே பெற்றோர் குழந்தைகளுக்கு உழைப்பின் பெருமையை உணர்த்தவேண்டும். கடுமையான உழைப்பினால் எதிர்காலத்தில் நமது வாழ்க்கை எல்லாவிதத்திலும் பிரகாசமடையும் என்பதை சின்னஞ்சிறு வயதிலேயே நமது குழந்தைகளுக்கும் போதித்து விடவேண்டும்.
நெசவு இயந்திரங்களில் நவீன உத்திகளைப் புகுத்திப் புதுமைகள் செய்த சாமுவேல் ஸ்லேட்டர் தமது எதிர்கால முன்னேற்றத்துக்கான பணிகளைத் தமது பதினைந்தாவது வயதிலேயே தொடங்கிவிட்டார்.
சிறுசிறு இயந்திரக் கருவிகளைத் தயாரித்து மனித உழைப்புக்கு உதவிய டேவிட் வில்க்கின்சன் என்பார் தம்முடைய முயற்சிகளை பன்னிரெண்டாவது வயதிலேயே தொடங்கிவிட்டார். நீராவிப்படகு அவருடைய கண்டுபிடிப்புதான்.
தற்காலக் கப்பல் போக்குவரத்து முறையினைச் சீரமைத்துத் தந்த ராபர்ட் புல்ட்டன் என்பவர் தம்முடைய இருபத்திரண்டாம் வயதில் முயற்சிகளில் ஆரம்ப வெற்றியைக் கண்டுவிட்டார். உருக்குத் தொழிலின் சிருஷ்டி கர்த்தா என்று அழைக்கப்படும் ஸர் ஹென்றி பெசிமர் என்பவர் தம்முடைய முயற்சிகளைத் தமது பதினாறாவது வயதிலேயே துவங்கிவிட்டார்.
ஆகவே எந்தப் பருவத்தில் உழைக்கத் தொடங்குவது என்று யோசனை செய்து கொண்டு இருக்காமல் முடிந்த அளவு சிறு பருவத்திலேயே தமது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்து உழைக்கத் தொடங்கிவிட வேண்டும். வாழ்க்கையில் முன்னேறிவிட்டதனாலேயே உழைப்பை நிறுத்திக் கொண்டுவிட வேண்டும் என்று எண்ணக்கூடாது.
இருபது அல்லது இருபத்தைந்து வயதின்போது உழைத்த மாதிரி நம்மால் ஐம்பதாவது வயதில் உழைக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வயதில் நம்மால் எந்த அளவு உழைக்க இயலுமோ அந்த அளவு உழைக்கப் பின்வாங்கக்கூடாது. முதுமைக்கால உழைப்பினால் எந்த அளவுக்குப் பணலாபம் என்று எண்ணிப் பார்க்கக் கூடாது. உடல்நலமும், மனமகிழ்ச்சியும் அப்போது எந்த அளவுக்கு இருக்கும் என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மோட்டார் மன்னர் என்று புகழப் பெற்ற அமெரிக்கத் தொழிலதிபர் ஹென்றி போர்டு தமது எண்பத்து மூன்றாவது வயதில் உயிர் நீத்தார். உயிர் விடுவதற்குச் சில மணி தேரத்திற்கு முன்பு வரை அவர் தமது தொழிலகத்தில் இருந்தார்.
நீராவி இயந்திரங்களைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை ஜேம்ஸ்வாட் தமது 83ஆவது வயதில் உயிர் நீத்தார். மரணமடைவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் தாம் புதிதாகக் கண்டுபிடித்த ஓர் இயந்திரத்தில் அச்சிட்ட அழகான படங்களைத் தமது நண்பர்களுக்கெல்லாம் அன்பளிப்பாகத் தந்து மகிழ்ந்தார்.
இவ்வாறு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை எட்டிய அறிஞர்கள் எல்லாம் தமது வாழ்நாள் முழுவதிலும் உழைப்பதிலேயே பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்து நாமும் வாழ்நாள் முழுவதும் உழைக்க நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.