

ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆடம்பரமில்லாத அமைதியான வாழ்க்கை. சுற்றமும் நட்பும் கூடி வாழ்ந்த வாழ்க்கை. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சில தட்டுமுட்டு சாமான்கள், வீட்டு சமையல், சொத்துக்களைத்தேடி அலையாத வாழ்க்கை என பொதுவாக அனைவருடைய வாழ்க்கையும் நிம்மதியாகவே கழிந்தது.
அக்காலத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணம்கூட பெரும்பாலோருக்கு இருக்காது. சொற்ப வாடகையில் வசதியான வீடு கிடைக்கும். அதில் நான்கைந்து குடித்தனக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
எங்களுக்கெல்லாம் கேஸ் அடுப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வீட்டில் சோபா செட் இருக்காது. கடிகாரம் இருக்காது. ஏன் பெரும்பாலானவர்கள் வீட்டில் ரேடியோ கூட இருக்காது. ரேடியோ ஆடம்பரமான பொருளாக கருதப்பட்ட காலம் அது. சைக்கிளும் இருக்காது. நடந்தே செல்வர். இவை எதுவுமே இல்லாமல் எந்த பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கை.
தற்காலத்தில் ஒவ்வொருவரும் ஒருவித டென்ஷனுடனே ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் சொந்தவீடு, கார், ஏசி என அனைத்து ஆடம்பரப் பொருட்களும் பெரும்பாலானவர்களின் வீட்டில் இருப்பதைக் காணமுடிகிறது. எல்லா வசதிகளும் இருந்தும் ஒன்றே ஒன்று மட்டும் நம்மிடம் இல்லை. அது நிம்மதி. இது எல்லாவற்றிக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால் அதீத ஆசை மற்றும் வரவிற்கு மீறிய செலவு என இவை இரண்டுமே காரணமாக இருக்கும்.
ஒரு வீடு சொந்தமாக வாங்கியதும் நமது மனது அடுத்த வீட்டை எப்போது வாங்குவோம் என்று யோசிக்கத் தொடங்கிவிடுகிறது. பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்ற டென்ஷன். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம் வசதியான வாழ்க்கையைப் பார்த்து வியக்க வேண்டும் என்ற எண்ணம் தற்காலத்தில் மேலோங்கி இருக்கிறது. வாரத்திற்கொருமுறை அவுட்டிங் என்ற பெயரில் வெளியே சென்று ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனோபாவமும் மேலோங்கிவிட்டது.
அக்காலத்தில் வரவுக்குத் தகுந்த செலவு என்ற கொள்கை பெரும்பாலோரால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடன் வாங்கவே பெரிதும் யோசிப்பார்கள். வேறு வழியில்லாமல் போனால்தான் கடனை வாங்குவார்கள். அதையும் எப்பாடுபட்டாவது திருப்பித் தந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே மூழ்கிக் கிடப்பார்கள். தற்காலத்தில் ஆடம்பர செலவிற்காகவே கடன் வாங்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் கூட ஆப்கள் வந்து விட்டன. யோசிக்காமல் அதிகவட்டிக்கு கடனை வாங்கி செலவழித்து விட்டு பின்னர் அதைத் திருப்பிச் செலுத்த இயலாமல் திண்டாடும்போது நம் நிம்மதி பறிபோய்விடுகிறது.
எளிமையான வாழ்க்கை. சிக்கனமான வாழ்க்கை. வரவிற்குத் தகுந்த செலவு. ஆடம்பரங்களை அறவே தவிர்த்தல். இவற்றையெல்லாம் நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்து வாழப் பழகுவோம். இதனால் நம் வீட்டிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. நம் வீட்டுப் பொருளாதாரம் சரியான நிலையில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
யோசிக்காமல் நாம் செய்யும் பல செயல்கள் நம் நிம்மதி பறிபோகக் காரணமாகிவிடுகிறது. எனவே நாம் இன்றிலிருந்து நமக்காக வாழத் தொடங்குவோம். எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் எது என்றால் அது நிம்மதிதான். எளிமையாக உங்களுக்காக வாழத்தொடங்குங்கள். நிம்மதி உங்கள் வீட்டுக் கதவை தினம் தினம் தட்டும். இது நிச்சயம்.