
வெற்றி எனும் சந்தடியற்ற இடத்திற்குப் படிப்படியாக ஏறும் பொழுது, மீண்டும் வாழ்க்கையின் எல்லாவிதமான வகுப்பினரையும் காண்கிறோம். கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பிரபல மந்திரிகள், அரசு ஊழியர்கள், ஒவ்வொரு துறையிலும் கொடி கட்டிப் பறந்தவர்கள், - இவர்கள் எல்லோருமே ஏழை எளிய நிலையிலிருந்து வந்தவர்களாக, சில சமயங்களில் பணக்கார சமூகத்திலிருந்து வந்தவர்களாக, சிதறிப்போன குடும்பங்களிலிருந்து வந்தவர்களாக, குடியானவர் களாகவும் குடிசையில் வாழ்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
பெரும் பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களையும் சுய சரிதங்களையும் படித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் அறிவது என்ன? தங்களை முழுவதுமாக இழந்து, இனி எழுந்திருக்க வழியே இல்லை என்று வீழ்ந்திருக்கக் கூடிய சூழல்கள் எத்தனை எத்தனையோ !
உங்கள் கம்பெனியின் தலைவரின் பின்னணி என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அல்லது உங்கள் நகர மேயரின் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள். அல்லது உண்மையிலேயே ஒரு வெற்றியாளர் இவர்' என்று சொல்லக்கூடியவர் ஒருவரின் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள். நன்றாக ஊன்றி அறிந்து கொண்டால், அவர்கள் ஒவ்வொருவரும் மிகப் பெரியதும் மிக மிக உண்மையானதுமான தடங்கல்களைத்தாண்டி வந்தவர்கள் என்பது புரியும்.
எந்த ஒரு பெரும் வெற்றியையும் தடங்கல்கள் இல்லாமல் பெற்றிருக்க முடியும் என்பது சாத்தியமில்லை. எத்தனையோ இன்னல்கள்,சோதனைகள், பின் வாங்கல்கள் ஏற்பட்டிருக்கத் தான் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் உங்களுக்கு மென் மேலும் உந்துதலைக் கொடுக்கும் வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் பின்வாங்கும் நிலையில் தவிக்கும் பொழுது, நல்ல முடிவு ஒன்றை எடுங்கள். அடுத்தமுறை குடும்பத்திலோ அல்லது பணியிலோ சறுக்கல்கள் ஏற்பட்டால், சற்றே நிதானித்து தோல்விக்குக் காரணத்தை ஆராயுங்கள். அதே தவற்றை மீண்டும் செய்யாதிருக்க இதுவே வழி .
தோல்விகள் ஆராயப்பட்டு பாடங்கள் கற்கப்பட்டாலே மதிப்படைகின்றன. தன்னைத்தானே பார்த்து சோதித்துக்கொள்வது ஆக்கபூர்வ மானது. வெற்றிக்கு உரிய பக்குவத்தைக்கொண்டு வருகிறது.
தனிப்பட்ட வல்லமையையும் திறனையும் அது கொண்டு வருகிறது. பிறர் மீது பழி சுமத்துவது ஆக்கவினை அல்ல. பிறர் தவறு செய்து விட்டார் என்று 'நிரூபிப்பது' உங்களுக்கு எந்தவித பிரயோஜனத் தையும் கொண்டு வராது.
ஆக்கபூர்வமாகவே உங்களை சோதித்துக் கொள்ளுங்கள். உங்களையே தார்மீகமாக விமர்சித்து அறியுங்கள். உண்மையான தொழில் விற்பன்னர்களைப்போல இருங்கள். அந்த ஆற்றலே அவர்களைத் தொழில் விற்பன்னர்களாக ஆக்கி இருக்கிறது. தங்கள் குறைகளையே தேடிக் கண்டுபிடித்து திருத்திக் கொள்கிறார்கள். அதுவே அவர்களைத் தொழிலில் வல்லுநர்களாக ஆக்குகிறது.
அப்படிக் குற்றங்களைக்களைய முற்படும்பொழுது, ''ஓ! இது ஒரு காரணம். நான் இந்த காரணத்தாலேயே வெற்றியை இழக் கிறேன்" என்று சொல்லிக்கொள்ளாதீர்கள்.
அதற்கு மாறாக, குற்றங்களைக் காணும் பொழுது, "அடடா! என்னைத் திருத்திக்கொண்டு பெரும் வெற்றியை அடைய மற்றுமொரு தருணமாகிறது'' என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
"உண்மையிலேயே தோல்வி அடைந்தவர் யார் என்றால், தவறு செய்தவர் என்ற காரணத்தால் அல்ல, ஆனால் தவறிலிருந்து பாடம் கற்றுத் தன்னை திருத்திக் கொள்ளாதவரே தோல்வி அடைந்தவர் ஆவார்" என்று எல்பர்ட் ஹப்பர்ட் சொன்னார்.