
ரவீந்திரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காளக் கவிஞர். இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றியவர். அவருடைய கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு பெற்றவர். ஏராளமான கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் புதினங்களை எழுதியுள்ளார். இவருடைய எழுத்துகள் நம்பிக்கை சுயமுன்னேற்றம் துணிவு போன்றவர்கள் வெளிப்படுத்துவதாக இருக்கும்
1. “கடலைக் கடக்க நினைப்பவர்கள் வெறுமனே கடல் அலையையும் நீரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் கடலைக் கடக்க முடியாது”
2. “வானில் விடிவெள்ளி முளைக்காமல் இருட்டாக இருக்கும் போதும் நம்பிக்கை என்ற பறவைக்கு வெளிச்சம் கிடைத்துவிடுகிறது”
3. “ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் பிரார்த்திப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை துணிவோடு எதிர்கொள்ள வேண்டும் என்றே பிரார்த்திக்க விரும்புகிறேன்”.
4. “நான் உறங்கும்போது கண்ட கனவில் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருந்தது. கண்விழித்து எழுந்தபோது வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்கு அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் என்று உணர்ந்து கொண்டேன். அதன்படியே நான் நடந்து கொண்டேன். சேவை என்பதே எனது மகிழ்ச்சியானது”.
5. “அழகான பட்டாம்பூச்சி அது வாழப்போகும் மாதங்களை எண்ணுவதில்லை. அதற்கு மாறாக தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கிறது”
6. “உயர்ந்த கல்வி என்பது வெறுமனே தகவல்களை தருவதாக இருக்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கையை இயற்கையோடும் மனிதர்களோடும் இணைப்பதாக இருக்க வேண்டும்.”
கபீர்தாசரின் பொன்மொழிகள்:
15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கபீர்தாசர், ஒரு புகழ்பெற்ற இந்தியக் கவிஞர் மற்றும் ஞானி. இந்து, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு பாடுபட்டவர். அவருடைய கவிதை வரிகள் எளிய முறையில் சிறிதாக இருந்தாலும் ஆழமான கருத்தை பிரதிபலிப்பவை.
7. “நாளை என்ன செய்ய வேண்டுமோ அதை இன்றே செய்யுங்கள். இன்று என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போதே செய்யுங்கள். நிமிடங்கள் அழிந்து கொண்டிருக்கையில் எப்போது அவற்றை செய்யப் போகிறீர்கள்?”
8. புத்தகங்களை படிப்பதனால் மட்டும் ஒருவன் பண்டிதனாக முடியாது. ஆனால் மனித மனங்களில் குடிகொண்டிருக்கும் அன்பை படித்தவன் மட்டுமே பண்டிதனாக முடியும்.
9. இந்த உலகில் ஒவ்வொன்றும் பொறுமையாக, மெதுவாகத்தான் நடக்கின்றன. தோட்டக்காரர் நூற்றுக்கணக்கான செடிகளுக்கு நீரூற்றினாலும் ஒவ்வொரு பருவத்திற்கேற்ற மாதிரிதான் செடிகளில் பூக்களும், காய்களும் கனிகளும் காய்க்கின்றன. எதிலும் அவசரம் கூடாது. உடனடிப் பலனை எதிர்பார்க்கக்கூடாது.
10. இந்த உலகில் பெரிதாக இருப்பதில் அர்த்தம் எதுவும் இல்லை. பனைமரம் நிழலில் எந்த பயணியும் ஒதுங்க முடியாது. பசிக்கு உடனே பறித்து உண்ண முடியாதபடி அதனுடைய கனிகள் எட்டாத உயரத்தில் இருக்கின்றன. வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் பிறருக்குப் பயன்படுமாறு வாழவேண்டும்.