
சிலர் எப்பொழுது பார்த்தாலும் மிகவும் பரபரப்பாகக் காணப்படுவார்கள். அதைப் படித்தாயா, இதைப் பார்த்தாயா என்று அவர்களைக்கேட்டால் போதும், 'அதற்கெல்லாம் எங்கே நேரம். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன்' என்பார்கள். இப்படிப் பரபரப்பாய் இருப்பதில் தவறில்லை.
ஓயாத உழைப்பு ஒருவரை உயர்த்தும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஓயாத உழைப்பால் சோர்வு ஏற்பட்டு அது நம் திறமையைப் பாதித்து விடக்கூடாது. கடும் உழைப்பின்போது சோர்வு ஏற்படுவது சகஜம். ஆனால் அதைத் தடுக்க முடியும்.
உலகக் கோடீஸ்வரன் என்று மதிக்கப்பட்ட ஜான் டி ராக்பெல்லர் பெரும் பணத்தைச் சம்பாதித்ததோடு 98 வயதுக்காலமும் வாழ்ந்தார். அவரும் கடும் உழைப்பாளிதான். இருப்பினும் அவர் தினமும் மதியத்தில் அவரது அலுவலக சோபாவில் நீட்டிச்சாய்ந்து அரைமணி நேரம் உறங்குவார். அப்படி அவர் உறங்கும்போது அமெரிக்க ஜனாதிபதி கூட அவருடன் தொடர்புகொள்ள முடியாது. அந்த அரைமணி நேர இளைப்பாறலுக்கு அவர் தந்த மதிப்பு அவ்வளவு.
பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனைப் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது தனது 70 ஆவது வயதில் தினமும் 16 மணி நேரம் உழைத்தார் . வரும் செய்திகளைப் படித்தல், போட வேண்டிய உத்தரவுகளை 'டிக்டேட்' செய்தல், முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துதல், இத்தனை காரியங்களையும், காலை 11 மணி வரை படுக்கையிலிருந்தபடியேதான் செய்வார்.
மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு மறுபடியும் ஒருமணி நேரம் தூங்குவதற்காகப் படுக்கைக்குச் சென்றுவிடுவார். மறுபடியும் மாலை இரவுச் சாப்பாட்டிற்கு முன்னர் இரண்டு மணி நேரம் தூங்குவார். இது என்ன இந்தச் சர்ச்சில் சரியான தூங்கு மூஞ்சியாய் இருப்பார் போலிருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. சர்ச்சிலுக்கு எப்படி உழைக்கவேண்டும் என்ற இரகசியம் தெரிந்திருந்தது.
உழைப்பின்போது சோர்வு வரும்போல் தோன்றும் போதே. இளைப்பாறுதலுக்குச் செல்லுதல் இருக்கிறதே, அது வருமுன் காப்பது போல். தூங்கும்போது கூடப் புத்திசாலித்தனமாய் நேரத்தைத் தேர்ந்தெடுத்து உறங்கியதால்தான் அவரால் போர்க்காலத்தில் சில நுண்ணிய முடிவுகளைத் திறமையாக எடுத்து சிறப்போடு பணியாற்ற முடிந்தது.
ஹாரஸ்மான் என்ற கல்லூரித் தலைவர் ஒருவர் மாணவர்களுக்குத் தேர்வு கொடுக்கும்போது சோபாவில் படுத்தபடியேதான் அதைச் செய்வார். ஜாக் செர்டாக் என்ற ஒரு பிரபலமான ஹாலிவுட் டைரக்டர் ஒரு நிறுவனத்தில் ஓய்ச்சல் இன்றி உழைத்து மித மிஞ்சிய சோர்வால் அவதிப்பட்டு மாத்திரை, மருந்துகள் என்று ஏராளமாய்ச் செலவு செய்தார். இறுதியில் சோர்வுக்கு அவர் கடைப்பிடித்த மருந்து, சோபாவில் நீட்டிச் சாய்ந்து ஓய்வு எடுத்தபடி தன் காரியங்களைக் கவனித்ததுதான்.
கடுமையாக அலுவலகங்களில் பணியாற்றுவோர் மதிய உணவிற்குப் பிறகு ஒரு பத்து நிமிடங்கள் கண் அயரலாம். மற்றவர்கள் தங்கள் வேலைக்கேற்ப ஐந்தோ, பத்தோ நிமிடங்களில் இளைப்பாறிப் புத்துணர்ச்சி பெறலாம்.