
கிரேக்க மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் என்பது நாம் அறிந்தது. அரிஸ்டாட்டில் மிகவும் புகழ் பெற்ற கிரேக்க தத்துவஞானி. அரிஸ்டாட்டில் அரசியல், தர்க்கம், அறிவியல் என்று தன் சிந்தனையில் பன்முகத்தன்மை கொண்டவர். அவரை மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை என்று அழைப்பர். அவரின் தத்துவ மொழிகள் கூறுபவற்றை இப்பதிவில் காண்போம்.
இளமையைப் பற்றி அறிஞருக்கு அறிஞர் அரிஸ்டாட்டில் குறிப்பிடும் பொழுது அது மகிழ்ச்சி நிரம்பியது. துன்பத்தோடு யாதொரு தொடர்பும் கொள்ளாதது என்று கூறுகிறார்.
சலவை கல்லுக்கும் ஒரு சிற்பத்திற்கும் என்ன தொடர்பு உள்ளதோ அதே தொடர்புதான் கல்விக்கும் ஆன்மாவுக்கும் இருக்கிறது. சாதாரணமாக மனிதனிடம் பெரும்பாலும் ஒளிந்து கிடக்கும் தத்துவ ஞானியையும், மகானையும் ,வீரனையும், அறிஞனையும், நல்ல மனிதனையும், பெரிய மனிதனையும் சரியான கல்வி வெளியே இழுத்து வெளிச்சத்திற்கு கொணர்கிறது என்று அடிசன் கூறினார்.
அவரின் இப்பொன்மொழிக்கு மூலமாக அமைந்தது ஒவ்வொரு சலவைக் கல்லிலும் ஒரு சிலை பொதிந்துள்ளது. தேவையற்ற பகுதிகளை செதுக்கித் தள்ளிவிடின் அது தோற்றமளிக்கும்?" என்று அரிஸ்டாட்டில் கூறிய இறவா வரம் பெற்ற பொன்மொழியே ஆகும்.
இளைஞர்களுக்கு கல்வி அளிக்கப்படவில்லையானால் பேரரசுகள் கூட நீடித்து நிலைத்து நிற்க இயலாது என்று அரிஸ்டாட்டிலும் கூறிச் சென்றார்.
அலெக்சாண்டர் பரந்த ஆழ்ந்த அறிவைப் பெறுவதற்கு அவருக்கு அரிஸ்டாட்டில் உறுதுணையாக இருந்தார்.
குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பவர்கள் அவர்களை ஈன்றெடுத்த தாய், தந்தையரை விட அதிகமாக கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். ஏனெனில் அவர்களின் தாய் தந்தையர்கள் அவர்களுக்கு உயிரைத்தான் வழங்குகின்றனர். ஆசிரியர்களோ அவர்களுக்கு நன்றாக வாழும் கலையை வழங்கி உள்ளார்கள் என்று அரிஸ்டாட்டில் கூறிச்சென்றார்.
கல்வியின் வேர் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதனுடைய பழமோ இனிமையானது என்று 2000 ஆண்டுகளுக்கு முன் அரிஸ்டாட்டில் கூறிச்சென்றார்.