
சரியாக அக்கியூரெட்டாக செய்யவேண்டும். அதை எப்பொழுதுமே செய்யவேண்டும். 90% சரியாக செய்கிறோம் என்பதெல்லாம் வெற்றியை நிச்சயப்படுத்த போதுமானதல்ல. செய்வதில் 100% சரியாக இருக்கும்படி திட்டமிட வேண்டும் .அதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். முயற்சிக்க வேண்டும்.
பெரிய மருத்துவமனைகள் இருக்கின்றன. அங்கே உயிருக்குப் போராடும் பல நோயாளிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அதில் நூற்றுக்கு எத்தனை பேர் நல்லபடியாகப் பிழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். தொண்ணூறு சதவிகிதம் போதுமா? அல்லது ஒருவர் விடாமல், அனைவருமே பிழைக்க வேண்டும் என்றா?
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் லட்சக்கணக் கானவர்களுக்கு தினசரி பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. அதில் 10 சதவிகிதமென்பதே எத்தனையோ ஆயிரம் பாக்கெட்டுகள். பத்து சதவிகிதம் வரை பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போய்விட்டால் பரவாயில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?
ஒவ்வொரு நாளும் நான்கு வீதம், ஒரு மாதத்தில் நமக்கு மொத்தம் 100 கடிதங்கள் வரவேண்டும். வருகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதில் எத்தனை கடிதங்களை நமது 'போஸ்ட் மேன்' சரியானபடி நம்மிடம் எடுத்து வந்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்போம்?
நூற்றுக்குத் தொண்ணூறு போதுமா? அப்படியென்றால், அது சரிதான் என்றால் நமக்கு வர வேண்டியதில் பத்து கடிதங்கள் வரை வராமல் போனால் நாம் ஒத்துக்கொள்கிறோமா?
ஆக, பல இடங்களில் 90 சதவிகிதம் என்பதுகூட, போதாதுதான். அட பரவாயில்லையே! ரகம் இல்லை. 'அடச் சே!' ரகம்தான். விமான சர்வீஸ்களை எடுத்துக் கொண்டால். கிளம்பிப் பறக்கும் அத்தனை விமானங்களும் சரியாகத்தானே கீழிறங்க வேண்டும். இதில் எல்லாம் நாம் எதிர்பார்ப்பது 'செண்டம்' நூற்றுக்கு நூறுதானே!
நூற்றுக்கு நூறு என்றால், சும்மா இல்லை. எத்தனை முறை செய்யப்படுகிறதோ, அத்தனை முறையும் மிகச் சரியாகவே செய்வது. சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். நித்தம் நித்தம் உலகத்தில் எத்தனையோ நிறுவனங்கள், நபர்கள் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எதைச் சரியாகச் செய்வதற்கும், சில பயிற்சிகள் அவசியம். முதலில் 'ஒரே மாதிரி செய்யும்' பக்குவம் மற்றும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். எதைக் கொடுத்தாலும் ஒழுங்காகச் செய்பவன். எப்பொழுதுமே மேல் முன்னேற விரும்புகிறவர்கள் 'அது'வே ஆகிவிட வேண்டும்.