
கர்வப்பட்டவர் வாழ்க்கையில் சர்வமும் பூஜ்யமாகிவிடும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என கர்வம் கொள்ளக்கூடாது. அகந்தை என்றும் அகத்தை அசுத்தமாக்கிவிடும்.
நமது மனம் தூய்மையாக இருக்க வேண்டும் அகந்தையை விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அது நம் கண்களை கட்டிப்போட்டு மாயவித்தை காட்டிவிடும்.
இன்னும் சில படித்த மேதாவிகள் இருக்கிறார்கள். கல்லூரி சென்று ஏதோ இரண்டு பட்டப்படிப்பு முடித்துவிட்டால் அவர்கள் தமக்குள் அகந்தையுடன் வலம் வருகிறார்கள்.
படித்துவிட்டாலோ, பல மொழிகள் தெரிந்து இருந்தாலோ மட்டும் எல்லாம் தெரிந்தவர் ஆகிவிடாது. ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் எல்லாம் முட்டாளும் அல்ல. அயல்நாட்டில் ஆங்கிலம் பேசத் தெரிந்த முட்டாள்களும் இருக்கின்றார்கள்.
கிணற்றுத்தவளை போல் வாழ்பவர்தான், அகம்பாவத்தின் ஆழத்தைக் கண்டவர்கள். இவர்களுக்குள் வட்டத்தைப் போட்டுக் கொண்டு அதற்குள் சாம்ராஜ்யம் நடத்தி, தனக்குத்தானே சக்ரவர்த்தியாக மகுடம் சூட்டி அழகு பார்ப்பார்கள்.
இந்தக் குணம் உள்ளவர்கள், பிறரை மதிக்கமாட்டார்கள். அதனால், வருங்காலத்தில் இவர்களும் சமுதாயத்தில் மதிப்பு இழந்து விடுவார்கள்.
அகம்பாவத்தால் பிறரைத் தூக்கி எறிந்தால் அவர்களும் தூக்கி எறிந்து விடுவார்கள்.
வாழ்வில் நல்லது. கெட்டது மாறி, மாறி வந்துகொண்டே இருக்கும். ஒரு மனிதன் எப்பொழுதும் சுகவாசியாகவே வாழ்ந்துவிடமுடியாது.
எனவே, பிறரை அனுசரித்தும் செல்ல வேண்டும். தான்தான் பெரிய ஆள் என அகம்பாவத்துடன் செயல்பட்டால், விரைவில் காணாமல் போய் விடுவார்கள் .அவருக்குத் துன்பம் ஏற்படும்பொழுது, உதவி செய்யவும் யாரும் முன்வர மாட்டார்கள்.
கர்வம் இல்லாதவரிடம் மட்டுமே, உள்ளத்தில் முழுமையான அன்பும் நிலைத்து இருக்கும். அன்பில்லாத மனிதன், மிருகத்தை விடக் கேவலமானவன்.
சிலர் மனதில் அகந்தைக்கு அடைக்கலம் தரும்போதுதான், மனிதனில் இருந்து வித்தியாசப்படுகின்றனர். மற்றவரிடம் இருந்தும் விலகி விடுகின்றனர்.
அகந்தை கொண்ட மனமும் அசுத்தமாகிவிடும். அது நல்லது என எதையும் ஏற்றுக்கொள்ளாது. குரங்கு மனம் கொண்டது. எதையும் பிடிவாதமாகச் செய்யும்.
தவற்றைத் திருத்திக் கொள்ளவும் அடம்பிடிக்கும் தொடர்ந்து தவறுகளைத் துணிந்து செய்யும். அகந்தை மனம். மனித வாழ்க்கைக்கு என்றும் எதிரிதான். அது நல்ல பாதையில் கொண்டு செல்லாது,
காரணம், நல்லவர்கள் கூறும் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாது. அறிவுரை கூறுபவரையும் பிடிக்காமல் விலக்கி வைக்கும்.
எவ்வளவு பெரிய வித்தை தெரிந்தவராய் இருப்பினும் அடக்கத்துடன் நடந்து கொள்ளவேண்டும். கர்வத்தால் எதையும் சாதித்து விடமுடியாது. கர்வம் கண்களைக் கட்டிவிடும்.
கர்வம் உள்ளவரிடம், வேறு யாரும் உண்மையாக நெருங்கிப் பழகவும் அஞ்சுவர்.
கர்வம் என்பதே வாழ்க்கைக்குத் தேவையில்லாத ஒன்று வாழ்க்கை சிறப்புடன் அமையவேண்டுமெனில் நல்ல மனதுடன் நல்ல எண்ணத்துடன் வாழுங்கள்.
எப்பொழுதும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.