
ஒருவர் நம் மீது கோபப்பட்டால், நாம் பதிலுக்கு அவரைவிட அதிகமாக கோபப்படுவோம். ஒருவர் நம்மை திட்டிவிட்டால் பதிலுக்கு அவரைவிட அதிகமாக நாம் திட்டுவோம். இது மனித இயல்பு. இதனால் உங்களுடைய கோபத்திற்கு தாற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
பொது இடங்களில் தெரியாத நபரிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகத்தெரிந்த நபரிடம் இம்மாதிரி நடந்துகொண்டால் ஏற்படும் பின் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.
உங்களைவிட தாழ்ந்த வேலையில் இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால் அவரால் நேரடியாக உங்களைப் பழி தீர்க்க முடியாது. அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் உங்களைப் பற்றி மோசமாகப் சொல்லி பழி தீர்த்துக்கொள்வார். இதனால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும்.
உங்களுக்கு சமமான பணியில் உள்ளவர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளும்போது அது தீராத கசப்பை ஏற்படுத்தும். அவருக்கு சம பலம் உள்ளதால் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் உங்களை பழி தீர்க்க விரும்புவார். உங்கள் வாய்ப்பைத் தட்டிப்பறிப்பார். அல்லது தனக்குத் தெரிந்த உயர் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றி மோசமாகப் சொல்வார்
உங்களை விட பெரிய பதவியில் உள்ளவர்களிடம் எதிர்மறையாக நடந்துகொண்டால் விளைவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும் உங்கள் வேலை போய்விடும் அல்லது வளர்ச்சி தடைபடும்.
இவ்வளவும் எதற்காக? நம்முடைய மனோபாவத்தை மட்டும் சிறிது மாற்றிக் கொண்டு செயல்பட்டால் மேற்கூறிய அனைத்துமே உங்களுக்குச் சாதகமாகும். உங்களுக்குக் கீழானவர்களிடம் கனிவாக நடந்து அவர்கள் பிரச்னையை பொறுமையாக கேட்டீர்கள் என்றால் வாழ்க்கை முழுக்க அவர் உங்களை மறக்க மாட்டார்.
உங்களுக்குச் சமமானவரிடம் பொறுமையாக நேர்மறையாக நடந்து கொண்டால் மிகச்சிறந்த நண்பர் கிடைப்பார். உங்களுக்கு எப்போதும் உதவக்கூடிய நட்பு வளையம் உருவாக்க முடியும். உங்களுக்கு மேலானவரிடம் நேர்மறையாக நடந்து கொண்டால் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். இவையெல்லாம் நடப்பதும் நடக்காமல் போவதும் உங்கள் மனோபாவத்தில்தான் உள்ளது.
நீங்கள் பொறுமையாக உண்மையான காரணத்தை அறிந்து எதிராளியின் மனோபாவத்தை மாற்ற முயற்சிக்கவும். அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு கொண்டு வந்துவிட்டால் கோபம் கசப்புகளை மறந்து இயல்பாக பேசுங்கள்.