
எது எனக்குப் பிடிக்கிறதோ அதைச் செய்வது என்பது வேறு. எதைச் செய்வது எனக்குச் சரியானதோ, அதைச் செய்வது என்பது வேறு.
இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் நிறைய. நமது ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகளை நாம் உணர்ந்து கொள்வது மிக அவசியம்.
மிகச் சாதாரணமான உதாரணம் ஒன்று சொன்னால், இந்த வேறுபாடு எளிதில் விளங்கும். 'வெங்காய பக்கோடா' என்று ஓர் உணவை எல்லோருமே சாப்பிட்டிருப்போம். மொறுமொறுவென்று சாப்பிட சாப்பிட, நாக்குக்கு அவ்வளவு ருசி! ஆனால், அத்தனையும் வயிற்றுக்குக் கேடு!
நமக்கு இந்த உணவை சாப்பிட மிகவும் பிடிக்கிறது; ஆனால் இதை சாப்பிடுவது நம் உடம்புக்கு சரிப்படாது. நாக்கு 'வேண்டும்' என்று சொல்கிறது; வயிறு 'வேண்டாம்' என்று சொல்கிறது.
திருநெல்வேலி அல்வா; தூத்துக்குடி மக்ரூன்; ஆற்காடு மக்கன் பேடா, என்றால் நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கத்தான் செய்கிறது. சர்க்கரை நோயாளியைக் கேட்டுப்பாருங்கள். 'நமக்குப் பிடிக்கிறது என்பதற்காக, நமக்கு சரிப்படாததை சாப்பிட முடியுமா…?" என்று கேட்டுப் பெருமூச்சு விடுவார்!
நமக்குப் பிடித்திருப்பதைக்கூட, நம் உடம்புக்கு சரிப்படாவிட்டால், உண்ணக்கூடாது. அப்படிச் செய்தால், அது உடம்புக்குக் கேடாக முடிகிறது. இவை உணவு தொடர்பானவை.
அதேபோல், நமது அன்றாட வாழ்க்கையிலும் சிந்தனை, சொல், செயல் இவை அனைத்துக்குமே, 'பிடித்திருக்கிறது என்பது வேறு; சரியானது என்பது வேறு....' என்னும் நிலைகள் உண்டு.
இளவயதில் காதல் உணர்வுகளில் மனம் சிக்கும். 'கள், -குடித்தால்தான் மயக்கம் தரும்; பார்த்தாலும், நினைத்தாலும்கூட மயக்கம் தருவது காதல்...' என்கிறான் வள்ளுவன்.
காதலில் சிக்கியவர்களுக்கு, அது தொடர்பான சிந்தனைகள் அனைத்துமே தேனாக இனிக்கும். எந்த நேரமும் அந்தச் சிந்தனைகளில் மிதந்துகொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேறும் கணங்கள் இப்படி அவர்களால் வீணடிக்கப்படும்.
தங்களுக்குப் பிடித்ததைதான் அவர்கள் செய்கிறார்கள்; ஆனால், வாழ்க்கைக்கு முன்னேற்றத்தைத் தரும் முயற்சிகளை இழக்கிறார்கள்.
வாழ்க்கையின் பல வாய்ப்புக்கள் நம் கை நழுவிப் போவதற்கு, வாழ்க்கைக்கு நல்லதோ அதைச் செய்வேன்...' என்று எண்ணாமல் எனக்கு எது பிடிக்கிறதோ அதைத்தான் செய்வேன்...' என்னும் மனநிலையே காரணமாக இருக்கிறது.
நமக்குப் பிடித்திருப்பதை செய்வதைவிட, எது சரியோ அவற்றைச் செய்து பழகுவதே மன அமைதியைத்தரும்.
வாழ்வின் மிகச் சாதாரண நிலையில் இருந்து மிக உயர்ந்த நிலை வரை, நமக்குப் பிடித்ததைச் செய்வதைவிட, சரியானதைச் செய்து பழகிக்கொண்டால்தான் வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்!