நீங்கள் நீங்களாக இருங்கள்!

Be yourself!
Motivational articles
Published on

வெற்றி பெறுகிறவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.

இது எங்கிருந்து வருகிறது? சிலரிடம் மட்டும் இது ஏன் அதிகமாகக் காணப்படுகிறது? சிலரிடம் ஏன் அறவே இல்லாமல் போகிறது?

உண்மை இதுதான். தன்னம்பிக்கையும் வெற்றியும் ஓர் சுழற்சியில் வருபவை. வெற்றியில் கிடைக்கிற தன்னம்பிக்கை மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத்தருகிறது. அத்துடன் தன்னம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யவும் வெற்றிகள் ஊக்கமளிக்கின்றன.

தன்னம்பிக்கையால் வெற்றியா, வெற்றியால் தன்னம்பிக்கையா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையா என்கிற பழைய கேள்வி மாதிரிதான்.

நீங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள விரும்பினால், இதுவரை அடைந்த சின்னச் சின்ன வெற்றிகளை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். தோல்விகளை, பின்னடைவுகளை மறந்துவிடுங்கள்.

பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், கற்றுக்கொண்ட பின் அவற்றை மீண்டும் நினைவு கொள்ள வேண்டியதில்லை. வெற்றிகளில் இருந்து தேவையானதைப் பெற்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எதிர்கால வெற்றிகளை மனதில் சித்திரித்துக் கொள்ளும் போதே, கடந்தகால வெற்றிகளையும் காட்சிப்படுத்திப் பாருங்கள்.

நிச்சயமான எதிர்பார்ப்புடன் விதைகளை ஊன்றுங்கள். எதிர்காலத்தில் அறுவடை செய்வதும் நிச்சயமானதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அறிவழியை ஏற்றி அதனால் வெற்றி அடையுங்கள்!
Be yourself!

"உங்களைக் கண்டு பிடியுங்கள் நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்களைப் போல் இன்னொருவர் இந்த உலகில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்."

ஒருவர் உடம்பாலோ மனதாலோ அடுத்தவரைப்போல் இருக்க விரும்புவது அபத்தம். அப்படி விரும்புகிறவரைப் போல் பரிதாபத்துக்குரியவர் வேறு யாரும் இருக்க முடியாது.

இர்விங் பெர்லின், கெர்ஷ்வின் என்று இரண்டு இசைக் கலைஞர்கள். அவர்கள் இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டபோது, பெர்லின் புகழ்மிக்கவராக இருந்தார்.

கெர்ஷ்வினின் திறமையால் கவரப்பட்ட பெர்லின் 'என்னுடைய உதவியாளராக வந்து விடுகிறாயா, மூன்று மடங்கு சம்பளம் தருகிறேன்' என்று அழைத்தார்.

கெர்ஷ்வின் சற்று யோசித்தார்.

அதைப் புரிந்துகொண்ட பெர்லின், "நீ இதற்கு ஒப்புக்கொண்டால் இரண்டாம் தர பெர்லின் ஆவாய், ஆனால் நீ நீயாகவே இருக்க முயன்றால் முதல் தர கெர்ஷ்வின் ஆகிவிடலாம்." என்றும் கூறினார்.

கெர்ஷ்வின் அந்த அறிவுரையைப் புரிந்துகொண்டார்.

நிதானமாக முன்னேறி தன்னுடைய தலைமுறையில் குறிப்பிடத்தக்கப் பாடலாசிரியர் ஆனார்.

உங்களிடம் ஏதோ ஒரு புதுமை இருக்கிறது. அது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். இயற்கை உங்களுக்கு எதை வழங்கியதோ அதிலிருந்து அதிகம் பெறப்பாருங்கள்... உங்களுடைய சூழ்நிலை, அனுபவம் மற்றும் மரபைச் சார்ந்தவராகவே நீங்கள் இருப்பீர்கள்.

உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள்தான் மற்றவர்களைவிட நன்றாக அறிந்திருக்க முடியும்.

ஆலமரமாக இருக்கப்பாருங்கள்.

இல்லையேல் ரோஜாச் செடியாக இருங்கள்.

அதுவும் இல்லையேல் பசும்புல்லாக இருந்து விட்டுப்போங்கள்.

எப்படியோ, நீங்கள் நீங்களாக இருங்கள்!

இதையும் படியுங்கள்:
பக்குவத்தைப் பறிக்கும் மன பட படப்பு...
Be yourself!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com