

ஒரு வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பொழுது களைப்படைவது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படி களைப்படைவதால் தீமை ஏற்படுவதாக எண்ணிக்கொள்கிறோம். உண்மையில் களைப்பு அடைவதால் சில உறுப்புகள் புத்துணர்ச்சி பெருகின்றன என்பதுதான் உண்மை. எப்படி என்ற எண்ணம் தோன்றும். அதற்கான காரணங்கள் இதுதான்.
இப்படி களைப்பு அடைவதால் சில நன்மைகள் ஏற்படுகின்றன என்று சொன்னால் நம்ப மாட்டோம். ஆனால் உண்மை அதுதான். களைப்பு என்பது உயிர் இயக்கத்தின் ஒரு நடைமுறைதான். நமது உடலில் உள்ள உயிரணுக்கள் ஓய்வு பெறுவதற்கு நாம் இடம் கொடுக்கவேண்டும். உடலில் சேதம் அடைந்த பகுதிகளை செப்பனிட வேண்டும். மூளையில் நரம்புகள் சம்பந்தமான உயிரணுக்கள் மீண்டும் வலுவூட்டப்பட வேண்டும். பயன்படுத்தித் தீர்ந்துபோன உராய்வு தடுப்புக்குரிய எண்ணெய் பசைகளை தசைநார்கள் புதிதாக உற்பத்தி செய்யவேண்டும். களைப்பின் காரணமாக உடல் இழந்த ஆற்றலை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு தூக்கம் மிகவும் இன்றி அமையாத ஒன்று என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி எப்பொழுதெல்லாம் வேலை செய்து களைப்பாக வருகிறதோ அப்பொழுது எல்லாம் நல்ல தூக்கம் தூங்கினால் உடலும் உள்ளமும் அமைதி பெறும். இழந்த ஆற்றலை மீண்டும் பெற தூக்கமே சிறந்த மாமருந்து.
உதாரணமாக ஒருவர் மணிக்கணக்கில் வரைந்து கொண்டிருக்கிறார் அல்லது பாடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் களைப்படைந்த பிறகும் படுத்து ஓய்வெடுக்க விரும்புவது இல்லை. குழந்தைகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்ப வந்தும் அவர்கள் ஓய்வெடுக்க விரும்பாமல் ஓடி விளையாடுவார்கள். சில பெற்றோர்கள் அப்பொழுதே வீட்டுப் பாடங்களை எழுத வைப்பார்கள். சில குழந்தைகள் எழுதுவதும் உண்டு. இதற்கு காரணம் என்னவென்றால் உடலில் சில பாகங்களே களைப்படைகின்றன என்பதனால்தான்.
உதாரணமாக மூளை, கண்கள், கைகள், கால்கள் ஆகியவை களைப்படைகின்றன. அவற்றிற்கு மீண்டும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுவது உண்டு. உடலின் மற்ற உறுப்புகளைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயலாற்றுவதன் மூலமாக நாம் உண்மையில் ஓய்வெடுக்கிறோம். இந்த ஓய்வு நமக்கு மிகவும் அவசியம்.
இப்படிப்பட்ட செயல்கள் மூலமாக சுவாசம் விடுதல் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. சுரப்பிகள் விறுவிறுப்புடன் இயங்குகின்றன. உடலின் களைப்படைந்த பகுதியிலிருந்து கழிவுப் பொருள்கள் அகற்றப்படுகின்றன.
ஆனால் நாம் முழுமையாக களைப்படைந்துவிட்டால் தூங்க வேண்டியதுதான் சிறந்த மருந்து. அதைவிடுத்து தொடர்ந்து வேலை செய்வது உள்ளுறுப்புகளை பாதிக்கச் செய்யும். இதனால்தான் முகத்தில் இருக்கும் சோர்வை பார்த்து அதிகமாக களைப்படைந்துவிட்டாய் . சிறிது ஓய்வு எடு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் கட்டாயப்படுத்தி குழந்தைகளையும், களைப்படைந்தவர்களையும் உறங்க வைக்கிறார்கள்.
ஆதலால் உடல் உழைப்பு செய்து களைத்து போனவர்கள், உடனடியாக ஓய்வெடுத்தால் புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலை செய்ய முடியும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்படி ஓய்வின் நடைமுறை பற்றி சில முக்கியமான தகவல்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் சோர்வடையும்போது ஓய்வுக்கு வழிவகுக்க முடியும்.
மூளை களைப்படையாமல் இருந்தால் வேலைகளை சிறப்பாக செய்யமுடியும். ஆதலால் நன்றாக உறங்க வேண்டிய நேரத்தில் உறங்கி, ஓய்வெடுத்த பின்னர் புத்துணர்ச்சியுடன் வேலைகளை தொடங்கி செய்ய வேண்டியதை செவ்வனே செய்து சிறப்படைவோமாக!