

ஆண்ட்ரூ கார்னீஜி என்பவர், ஒரு தொழிற்சாலையில் சாதாரணத் தொழிலாளியாக வேலையைத் துவக்கினார். தன் அறிவு, உழைப்பும் முதலியவற்றை மூலதனமாகக் கொண்டு ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலையின் அதிபராகத் தன்னை உயர்த்திக் கொண்டார்.
'இரும்பின் மன்னன்' என்ற பட்டப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக அவர் உருவெடுத்தார்.
வாழ்க்கையில் வெற்றியடைய, நிறைய பொருள் திரட்டி, சகல வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ ஆசைப்படும் அனைவருக்கும் இவர் பல நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
மனத்தில் ஓடும் எண்ணங்களுக்குச் சக்தியுண்டு. முதலில் ஒருவன் தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டும் என்பதைப் பற்றி நன்கு சிந்தித்து தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை தனக்குக் கட்டாயம் கிட்டும் என்று நம்பவேண்டும். அதற்குப்பின்தான் நினைத்ததை அடைய ஒருவன் பாடுபட்டு உழைக்கவேண்டும். இது பற்றி ஆண்ட்ரூ கார்னீஜி பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் திரட்டும் செல்வம், அனுபவிக்கும் இன்பம் மற்ற யாருக்கும் சிறிது கூடத் துன்பம் தராமலிருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய சக்தியை வெளிப்படுத்தும் மிகப்பெரிய எண்ணங்களை நினைப்பதை ஒருவன் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" மனத்தில் ஓடும் எண்ண ஓட்டங்களைப் பொறுத்தே ஒருவனுடைய வாழ்க்கை அமைகிறது.
தோல்வி தரும் எண்ணங்களையே எப்போதும் நினைத்து வருபவனுக்குக் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி கிட்டாது.
மிகச் சாதாரணமான எண்ணங்களையே நினைத்து வருபவன், தான் வாழ்ந்து வந்ததை நிரூபிப்பதற்கு எவ்விதத் தடயத்தையும் வைக்காமல், கால ஓட்டத்தில் தேய்ந்து இருந்த சுவடே தெரியாமல் வெடித்துச் சிதறும் நீர்க்குமிழியைப் போன்று மறைந்து விடுபவனாகத்தான் இருப்பான். எனவே, மிகப்பெரிய எண்ணங்களை நினைப்பதைப் பழக்கமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
கற்பனை என்னும் குதிரையை விரட்டி மிக உயர்ந்தவற்றைப் பற்றி நினைக்க ஆரம்பியுங்கள். நினைக்காததை ஒருவன் கட்டாயம் அடைய முடியாது. பூமியில் நெளியும் புழுக்களைப் போன்று வாழாமல், வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் போன்று வாழ ஆசைப்படுங்கள்.
வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை நன்கு நீ யோசனை செய்த பின் தீர்மானித்துக் கொண்டு, அதையே உயிர்மூச்சாக மாற்றிக்கொண்டு, வெறியுடன் செயல்படத் துவங்குபவனுக்கு கட்டாயம் வெற்றிகிட்டும்.
உலகத்தை வெல்லுவதைவிட மனத்தை வெல்லுவதுதான் மிகவும் கடினமான காரியம். கட்டை அறுத்துக்கொண்டு தான்தோன்றித் தனமாக ஓடும் கன்றுக்குட்டியைப் போன்று ஒருவன் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் எண்ணங்களை ஓட விடக்கூடாது.
மனத்தை கட்டுப்படுத்திச் செயல்படத் துவங்குபவன்தான் பெரிய மனிதனாக உருவெடுக்க முடியும். ஒவ்வொருவனும் தன்னுடைய மனத்தை, தனக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
நம்பிக்கை என்பது தனிப்பட்ட ஒருவனுடைய சொத்து அல்ல. அது உலகம் அனைத்திற்கும் சொந்தமான மாபெரும் சக்தி. இந்த மாபெரும் சக்தி, மிகச்சாதாரண மனிதனுக்கும், பெரிய மனிதனுக்கும் சுலபமாகக் கிடைக்கக் கூடியதுதான்.
இந்த மனதின் சக்தியைப் பயன்படுத்தி இந்த உலகில் எண்ணற்ற காரியங்களைச் செய்து முடிக்கலாம். எனவே சக்தியைச் சாதனை யாக்குவோம்.