
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்பதை உங்களின் சிரிப்பின் மூலமே உலகத்திற்கு அறிவிக்க முடியும். மகிழ்ச்சியாக இருக்கும் போது, அந்த உணர்வை அவர்களிடம் பரவவிடுங்கள்.
உங்கள் காலை ஒருவர் மிதித்துவிட்டால், உங்கள் முகம் மாறுகிறது. உங்களுக்குப் பதவி உயர்வு வந்தால், உங்கள் முகம் மாறுகிறது; உங்கள் உரிமை பறிக்கப்படும்போது, உங்கள் முகம் மாறுகிறது; அதனால்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிறார்கள். நமது மலர்ந்த முகமே மற்றவர்களைக் கவரும் மூலதனம்.
உங்களைத் தோல்வியடையச் செய்த ஏதோ ஒன்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டு சோர்வாய் இருக்கும்போது, கடந்த கால வெற்றி ஒன்றை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலையைத் தூக்கிப் பயப்படாமல், வாய்விட்டுச் சிரியுங்கள். உங்களுக்குள் இருக்கும் பயம், கவலை விலகியிருக்கக் காண்பீர்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், உங்களுள் சில நற்பண்புகளும் கட்டாயம் இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். வெளிக்கொண்டு வாருங்கள். முதலில் உங்களுக்குக் காட்டுங்கள்; பின்னர் உலகிற்குக் காட்டுங்கள். அப்போது உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், பிறருக்கு உதவுங்கள், மகிழ்ச்சி உங்களை வந்துசேரும்.
யாரேனும் ஒருவரை நீங்கள் மகிழ்ச்சியடையச் செய்யும்போது. உங்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சி ஏற்படும். மன நிறைவின் உண்மையான அர்த்தம் புலனாகும். மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பழக்கத்தை தொடருங்கள். உற்சாகமுடன் விளையாடுங்கள்.
காலார நடந்து மகிழுங்கள். நீங்கள் ரசித்து அனுபவித்த மகிழ்ச்சியூட்டும் சிரிப்புகளைப் பிறருக்கும் சொல்லுங்கள்; பரவ விடுங்கள். உங்களுக்குப் பிடித்த இசை, ஓவியம், நாடகம் ஆகியவற்றை நீங்கள் தீர்மானியுங்கள். தனிமையில் இனிமை காணமுடியாது. நள்ளிரவில் சூரியனைக் காணமுடியாததைப்போல.
சோம்பலுக்குக் கதவைத் திறக்காதீர்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையாகிவிடாது என்பதை மறந்து விடாதீர்கள். வெறும் உழைப்பு மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. உங்கள் உடம்பு, மனைவி, குழந்தைகள், உறவு, நட்பு அவர்களின் வளர்ச்சி இப்படி எத்தனையோ இருக்கின்றது. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.
அன்னை, தந்தை, சகோதர, சகோதரிகளுடன் உண்மையான வாஞ்சையுடன் இருங்கள். உறவு, நட்புடன் உற்சாகமாக இருங்கள்.
பிள்ளைகளின் வளர்ச்சியில், மனைவியின் புன்னகையில் நண்பர்களின் உயர்வில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுங்கள்; மகிழ்ச்சிப் பாதை உங்களுக்கு புலப்படும்.
நமது முகம் எப்போதும் மலர்ந்த பூவைப்போல மலர்ச்சியுடன் திகழட்டும். மலர்ந்த முகம் மற்றவர்களைக் கவரும் என்பதோடு மட்டுமல்ல; வாழ்க்கையின் உயர்வுக்கு வழியாகவும் அமையும்.
மனதில் நல்ல எண்ணங்கள் நிறைந்திருந்தால் முகத்தில் மகிழ்கள் ரேகைகள் படரும்.