சோர்வடைந்த மனதை உற்சாகமாக்குவது எப்படி?

Happiness
Happiness
Published on

நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். மகிழ்ச்சி நம் உடலாலும், மனதாலும் உணரப்படும் ஒரு இனிமையான உணர்வு ஆகும். சுயஅன்பே நமது தனிப்பட்ட மகிழ்ச்சியின் தொடக்க புள்ளியாகும். உடல், மனம், பொருள் சார்ந்த இன்பங்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.

நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம். அதனை மகிழ்வுடன் வாழ முயல்வதில் சுணக்கம் காட்டக் கூடாது. மகிழ்ச்சியை பெறுவதற்கான ஒரே வழி, நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் நபர்களின் தொடர்பில் தொடர்ந்து இருப்பதுதான்.

நமது மனதை நேர்மறையாக பயிற்றுவிப்பது நமது உள் மகிழ்ச்சிக்கு மிக முக்கியமானது. தியானம், சுவாசப் பயிற்சிகள், பொதுவான உடற்பயிற்சிகள் அனைத்தும் மகிழ்ச்சிசுரப்பிகளை தூண்டுகின்றன. மகிழ்ச்சியான நபர்களை அடிக்கடி சந்திப்பதன் மூலம் நாம் நேர்மறை அதிர்வுகளை பெற முடியும்.

நாம் வாழ்க்கையின் சிறு, சிறு மகிழ்வான நிகழ்வுகளைக்கூட ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அடிக்கடி புன்னகைப்பதும், தேவை ஏற்படும் போது வாய் விட்டு சிரிக்கவும் தயங்கக்கூடாது. நாம் மிகவும் விரும்பும் செயல்களை செய்வதில் ஒவ்வொரு நாளும் நமது நேரத்தைச் செலவிடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
எப்போதும் 'mood அவுட்'தானா? அதிலிருந்து வெளிவர எத்தனையோ வழிகள் இருக்கே!
Happiness

இறைவன் படைப்பில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமான திறமையுடையவர்கள். நமக்குள் இருக்கும் சிறப்பான திறனை நாம்தான் கண்டுபிடித்து, அதற்கு உரம் போட்டு வளர்க்க வேண்டும். வளர்ச்சிக்கான வாய்ப்புக்கான இடங்களை அடையாளம் கண்டு, அத்துறையில் தடம் பதிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனால், நமது வாழ்வில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கூடும்.

மனம் சோர்வடையும் போது, மிக விரைவாக அதிலிருந்து வெளியே வந்து விட வேண்டும். மனச்சோர்வு அதிகமாவதாக உணரும்போது போது, வெட்கப்படாமல் உளவியல் ஆலோசனைகளை பெற வேண்டும். மன அழுத்த மேலாண்மை, ஆழ்ந்த தூக்கம், நல்ல சுகாதாரம், ஆரோக்கியமான உணவு, நன்னடத்தை, பிறர் செய்யும் தீமைகளை மன்னித்தல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், சிறந்த மன ஆரோக்கியம் பெறுதல், மனநிறைவான வாழ்க்கை, பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவுதல், சத்தான உணவை சாப்பிடுவது, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, உடல் கேட்கும் போது ஓய்வெடுப்பது, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வது, நன்றியுணர்வுடன் இருப்பது, குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்வது, நம்பகமான நண்பர், குடும்ப உறுப்பினருடன் மனம் விட்டு பேசுவது, பிடித்த இசையுடன் இணைவது போன்றவை நமது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன.

மற்றவர்களின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்தும் போது, நம்மால் முடிந்த வரை அவர்களுக்கு உதவ முடியும். பிறருக்குத் தீங்கு ஏற்படுத்த மனதாலும் நினைக்க கூடாது. யதார்த்தத்தில் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களின் நலன் பற்றி சிந்தித்தும் அவர்களுக்கு உதவ முயற்சித்தும் மகிழ்ச்சியை பெறமுடியும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நம்மை தடை செய்ய யாராலும் முடியாது. எங்கும் எதிலும் மறைந்திருக்கும் மகிழ்ச்சியை தேடுவோம். தேடிக் கொண்டே வாழ்க்கையை தொடருவோம். நம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களை மற்றவர்களுக்காக ஒருபோதும் விட்டு விடக்கூடாது.

வாழ்க்கையில் சில சமயங்களில் பூங்காற்றும், சில சமயங்களில் புயல்காற்றும் வீசக்கூடும். அது நம் எல்லோருடைய வாழ்வில் இயல்பானதே. வாழ்க்கை சக்கரம் உருளும்போது இவையெல்லாம் எதார்த்தமான நிகழ்வுகளே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனோதத்துவத்தின் படி நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை காட்டும் 7 பழக்கங்கள்!
Happiness

எந்த பிரச்சினைகளுக்கும் மனதில் தீவிரமான இடம் கொடுக்கக்கூடாது. எனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை வைத்தால், மனது எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். மகிழ்ச்சி என்பது அகநிலை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது இன்னொருவருக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் தங்கள் சொந்த மகிழ்ச்சியை வரையறுத்து பின்பற்ற வேண்டும்.

நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு. எல்லோரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்கான தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இது தவிர்க்க முடியாதது. இவற்றை உணர்ந்து நடந்தால் நமக்கு மகிழ்ச்சியுடன் வாழ்வது சாத்தியமே என்பதை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com