

எலான் மஸ்க் ஒரே நேரத்தில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். "மற்றவர்கள் ஓராண்டில் சாதிப்பதை, என்னால் 4 மாதங்களில் சாதிக்க முடியும்" என்று அவர் கூறுவார். அவருடைய இந்த அசுர வேக வெற்றிக்குப் பின்னால் இருக்கும் 5 முக்கிய உழைப்பு முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
புதுமையான சிந்தனை:
பெரும்பாலான மக்கள் ஒரு காரியத்தைச் செய்யும்போது, "மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள்?" என்று பார்த்து அதையே பின்பற்றுவார்கள். ஆனால் மஸ்க் அப்படிச் செய்யமாட்டார். புதுமையான சிந்தனையை கையாள்வார். ஒரு சவாலைச் சந்திக்கும்போது, 'இது எப்போதும் இப்படித்தான் நடக்கும் என்ற பழைய எண்ணத்தை விடுங்கள். அந்தப் பிரச்னையின் அடிப்படையைக் கண்டறிய வேண்டும். உதாரணமாக, ஒரு பொருள் விலை அதிகம் என்றால், 'ஏன் விலை அதிகம்? அதன் மூலப்பொருள் என்ன? அதை நாமே குறைந்த விலையில் தயாரிக்க முடியுமா?" என்று யோசியுங்கள். இது உங்களை ஒரு தனித்துவமான வெற்றியாளராக மாற்றும்.
'டைம் பாக்ஸிங்' - 5 நிமிட விதிகள்:
மஸ்க் தனது நாள் முழுவதையும் 5 நிமிடச் சிறு துண்டுகளாகப் (Time slots) பிரித்து வைத்திருப்பார். சாப்பிடுவது முதல் மின்னஞ்சல் அனுப்புவது வரை அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.
வாழ்வில் இதைப் பயன்படுத்துவது எப்படி? நமது நேரம் பெரும்பாலும் எங்கே போகிறது என்றே தெரியாமல் வீணாகிறது. ஒரு வேலையைத் தொடங்கும்போது, "இதை 30 நிமிடத்தில் முடிப்பேன்" என்று ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிடும்போது, உங்கள் மூளை அதிக வேகத்துடன் செயல்படத் தொடங்கும்.
தேவையற்ற கூட்டங்களைத் தவிர்த்தல்:
மஸ்க் மிகவும் வெறுப்பது பலன் தராத நீண்ட நேரக் கூட்டங்களைத்தான். 'நீங்கள் ஒரு கூட்டத்தில் எதையும் கற்றுக்கொள்ளவில்லை அல்லது பங்களிக்கவில்லை என்றால், அங்கிருந்து உடனே வெளியேறுங்கள்" என்பது அவரது அதிரடி விதி. உங்களுக்குப் பயன் தராத அரட்டைகள், தேவையற்ற சமூக வலைதளப் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து தைரியமாக வெளியேறுங்கள். யாராவது தப்பாக நினைப்பார்களோ? என்று யோசிக்காதீர்கள். உங்கள் நேரத்திற்கு நீங்கள்தான் எஜமான். உங்கள் வளர்ச்சிக்கு உதவாத எதற்கும் "நோ" சொல்லப் பழகுங்கள்.
வேகமான தோல்வி, விரைவான முன்னேற்றம்:
SpaceX-ன் முதல் மூன்று ராக்கெட்டுகள் வெடித்துச் சிதறியபோது மஸ்க் கவலைப்படவில்லை. ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் அவர் டேட்டாவை (Data) சேகரித்தார்.
வாழ்வில் இதைப் பயன்படுத்துவது எப்படி? தவறு செய்துவிடுவோமோ என்று பயந்து எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். ஒரு காரியத்தை வேகமாகச் செய்து பாருங்கள்; தோற்றால் அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த நிமிடமே மாற்றிச்செய்யுங்கள். தயங்கி நிற்பவன் பின் தங்குவான், விழுந்து எழுபவன் சீக்கிரம் சிகரத்தை அடைவான்.
தீவிரமான கவனம்:
வாரத்திற்கு 80 முதல் 100 மணிநேரம் உழைப்பார் மஸ்க். "மற்றவர்கள் வாரத்திற்கு 40 மணிநேரம் உழைக்கும்போது நீங்கள் 100 மணிநேரம் உழைத்தால், அவர்கள் ஓராண்டில் முடிப்பதை நீங்கள் 4 மாதங்களில் முடிப்பீர்கள்" என்பது அவர் கணக்கு.
வாழ்வில் இதைப் பயன்படுத்துவது எப்படி? இது வெறும் உடல் உழைப்பைக் குறிக்கவில்லை; அந்த உழைப்பின் தீவிரத்தைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, உலகம் அழியப்போகிறது என்றால் கூட உங்கள் கவனம் சிதறக்கூடாது. அந்த ஒரு மணிநேரத் தீவிர உழைப்பு, சாதாரணமாகச் செய்யும் 5 மணிநேர வேலைக்குச் சமம்.
எலான் மஸ்க்கைப் போலச் சிந்திப்பது என்பது விதிகளுக்கு உட்பட்டு நடப்பது அல்ல, விதிகளை உருவாக்குவது. உங்கள் இலக்கு பெரியதாக இருந்தால், உங்கள் உழைப்பு முறையும் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருக்கவேண்டும். ஸ்மார்ட்டாக யோசியுங்கள், வேகமாகச் செயல்படுங்கள்!