
வெற்றி என்ற ஒன்றே நம் அனைவரின் இலக்காக உள்ளது. வெற்றிக்குத் தடையாக இருப்பது தயக்கம் என்ற பய உணர்வே. ஒரு புதிய வாய்ப்பு நம்மைத்தேடி வரும்போது அதை நம்மால் செய்ய முடியுமா என்று நம் மனது இயல்பாகவே சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது. நமக்கு முழு தகுதியும் திறமையும் ஆற்றலும் இருந்தாலும் கூட தயக்கம் என்ற உணர்வு உடனே எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. தயக்கம் நமது நம்பிக்கையை நம் மனதிலிருந்து அகற்றிவிடும் இயல்புடையது.
ஒரு வாய்ப்பு உங்களைத்தேடி வரும்போது நீங்கள் உடனே தயக்கத்துடன் முடியாது என்று சொல்லி மறுப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது. உங்களைத் தேடிவந்த வாய்ப்பு வீணாகப் போவதுதான் மிச்சம். ஆனால் மனஉறுதியுடன் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் மனதில் தயக்கம் ஏதுமின்றி அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு முயற்சி செய்து தான் பாருங்களேன். இதில் கட்டாயம் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கலாம். அல்லது உங்கள் முயற்சி தோல்வியில் முடியலாம். ஆனால் இந்த முயற்சியில் ஒரு அனுபவம் நிச்சயம் கிடைக்கும். அதுதான் உங்கள் வாழ்வை முன்னேற்றப் பயன்படும் மூலதனம் என்பதை நீங்கள் உணருங்கள்.
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் சில இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். விவேகானந்தர் ஓரிடத்தில் நின்று கொண்டு அவர்கள் பயிற்சி பெறுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞர்கள் விவேகானந்தரின் ஆற்றலைப் பற்றி அறியாதவர்கள்.
ஓரு துறவிக்கு இங்கே என்ன வேலை? என்பது போல அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். அதில் ஒரு இளைஞன் விவேகானந்தரிடம் வந்தான்.
“நீங்கள் எதற்காக இங்கே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். துறவியாகிய உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு சுடத் தெரியுமா?”
அந்த இளைஞன் இப்படி அறியாமையினால் அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டான். உடனே விவேகானந்தர் தயக்கம் துளியும் இன்றி “எனக்கு துப்பாக்கி சுடத்தெரியும்” என்றதும் அவர்கள் கேலிப்பார்வை பார்த்தனர். ஆனால் உண்மையில் விவேகானந்தர் அதுவரை துப்பாக்கியால் சுட்டதே இல்லை. ஆனால் எதையும் தம்மால் வெற்றிகரமாக செய்யமுடியும் என்ற மனோபாவமும் மனஉறுதியும் கொண்டவர் விவேகானந்தர். அவர் மனதில் தயக்கம் என்பதே கிடையாது.
இளைஞர்கள் துப்பாக்கியை அவர் கையில் கொடுக்க அதை வாங்கி குறிபார்த்து சுட்டார். அவர் மிகச்சரியாக இலக்கைச் சுட்டார். இதைக் கண்ட அந்த இளைஞர்கள் வியந்து போனார்கள்.
எந்த பணியைச் செய்தாலும் தயக்கம் ஏதுமின்றி அதில் முழுகவனத்தையும் செலுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை அடிக்கடி நிரூபித்தவர் சுவாமி விவேகானந்தர். நாமும் இனி எந்த காரியத்தைச் செய்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு அக்காரியத்தில் முழுகவனத்தையும் குவித்து வெற்றி பெறுவோம்.
நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்க பல காரணிகள் உள்ளன. அவற்றில் தயக்கமின்மையும் ஒரு முக்கியமான காரணியாகும். தயக்கமின்றி எதையும் முறையாக நேர்மையாக அணுகுபவர்களே சாதிக்கிறார்கள். வாழ்க்கையில் ஏராளமான வெற்றிகளைக் குவிக்கிறார்கள். எனவே தயக்கத்தை உங்கள் மனதில் இருந்து அகற்றி அதற்கு விடை கொடுங்கள். உங்கள் பிரச்னைகளை தயக்கம் ஏதுமின்றி மனவலிமையோடு எதிர்கொள்ளுங்கள். வெற்றிகளைக் குவியுங்கள்.