
பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டுமானால் முதலில் நாம் தேவையானபொழுது மட்டுமே பேசவேண்டும். தேவையற்ற நேரங்களில் வாயை திறப்பது தேவையற்ற பிரச்னைகளை உண்டு பண்ணும். சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களுக்கு இதம் தரும் வார்த்தைகளை பேசுவது அவசியம். நம்முடைய பேச்சு எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களின் மனதை காயப்படுத்துமாறு இருக்கக் கூடாது.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும். பேச்சு என்பது ஒரு கலை. அதனைத் தன்மையாக வெளிப்படுத்த வேண்டும்.
பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். எண்ணுவதையெல்லாம் பேசிவிடக்கூடாது. நமக்கும் மற்றவர்களுக்குமான தொடர்பே பேச்சில்தான் உள்ளது. மனதை புண்படுத்தும் ஒரு சிறிய வார்த்தையால் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் இருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். பேச்சால் வாழ்ந்தவர்களும் உண்டு; வீழுந்தவர்களும் உண்டு. பிறர் மனம் புண்படாமல் அன்பாகப் பேசி பழகுவது நல்லது. தீய பேச்சுக்களால் பிறரை காயப்படுத்துவதுடன், நம்மை கறைபடுத்திக் கொள்ளாமலும் இருக்கலாம்.
ஒருவரின் பேச்சோ அல்லது அவர்கள் நடந்துகொள்ளும் விதமோ நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை நாசுக்காக அவர்கள் மனம் புண்படாத வகையில் உணரவைப்பது அவசியம்.
நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை ஒருவர் மீண்டும் மீண்டும் நம்மிடம் சொல்ல வரும் பொழுது அந்த சங்கடத்தை தவிர்க்க அவர்களை அழைத்து பக்குவமாக அவர்களுக்கு புரியும்படி நம் எண்ண ஓட்டத்தை சொல்லி விடுவது நல்லது. இதன் மூலம் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அவர்களின் மனதை காயப்படுத்துவதை தவிர்த்து விடலாம்.
நமக்கு பிடிக்காத ஒரு செயலை செய்து நம்மை கடுப்பேற்றும் நபரை மெள்ள தவிர்த்து விடலாம் அல்லது அவர்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம்.. அவர்களின் செயலை ஊக்கப்படுத்தாமல், எந்த ஒரு வார்த்தையையும் கடுமையாகக் கூறாமல் மௌனமாக ஒதுங்கி விடலாம். ஒரு கட்டத்தில் அவர்களே நம் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.
சிலர் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் பேசுவதை சகித்துக் கொண்டு, உள் மனதில் புலம்பிக்கொண்டு இருப்பார்கள். இது தேவையற்றது. பிறர் மனம் புண்படக் கூடாது என எண்ணுவது சரிதான்.
ஆனால் அதே சமயம் நாமும் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமல்லவா? இம்மாதிரியான சமயங்களில் தெளிவாக அவர்களிடம் அவர்கள் பேசுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதை உறுதியுடனும், தெளிவாகவும் அதேசமயம் கனிவாகவும் எடுத்து கூறுவது நல்லது. ஆனாலும் விடாப்பிடியாக நம்மை தொந்தரவு செய்பவர்களை தவிர்த்து, ஒதுங்கிவிடுவது நல்லது.
பிறரை கேலி செய்யும் வகையில் பேசாமல் இருப்பது நல்லது. ஒருவரின் உருவத்தை குறித்தோ, அவர்களின் செயல்களைக் குறித்தோ கேலி செய்யும்பொழுது அவர்கள் மனம் புண்படும். எனவே அதனைத் தவிர்த்துவிடுதல் நல்லது.
அத்துடன் பிறருடைய குறைகளை பெரிதாக்கி அதைப் பற்றி பேசாதிருப்பதும் நல்லது. யாரைப் பற்றியும் தவறாக பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது மிகவும் தவறு. கண்ணியமான, மென்மையான வார்த்தை களையே எப்பொழுதும் பேசவேண்டும்.