
புத்திசாலித்தனம் என்னும்போது நிலைமைக்கு ஏற்ப உங்கள் முடிவை சற்று மாற்றிக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். உங்களைவிட பலசாலிகளிடம் மோதும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களிடம் உங்கள் அறிவுறுத்தல் சில நேரங்களில் எடுபடாமல் போய்விடக் கூடும். அப்போதும் பிடிவாதமாக நீங்கள் அவர்களுடன் மோதிக்கொண்டே இருக்கக்கூடாது.
அது ஆபத்தானது. எதிரே இருப்பவரோடு மோதுவதற்கு உங்களுக்கு ஆள் பலம் இருந்தால் பரவாயில்லை. இல்லாத பட்சத்தில்? பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு பின்வாங்கிவிடுவதே அறிவுப்பூர்வமான செயலாகும்.
சிங்கமும். கழுதைப்புலியும் நண்பர்களாக இணைந்து இரைதேடி அலைந்தன. அப்போது ஒரு பசு சிக்கியது. அதனை அவை இரண்டும் அடித்துக் கொன்றன. பின்னர் கழுதைப்புலி, தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி, தனது பங்கை வாங்கி வருமாறு பணித்தது. சிங்கமும் பசுவின் கொஞ்சமாக மாமிசத்தைக் கழுதைப்புலியின் பங்காகக் கொடுத்தனுப்பியது.
இதனைப் பார்த்த கழுதைப்புலிக்கு கடும் கோபம் "எப்படி இவ்வளவு குறைவாக நீ வாங்கி வரலாம்? என்று தன் குட்டியிடம் 'காச்மூச்'சென்று கத்தியது. குட்டியோ, "சிங்கத்தைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருந்தது. இதையாவது கொடுத்ததே என்று நான் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்" என்றது.
இதைக்கேட்ட கழுதைப்புலி அந்த மாமிசத்தை எடுத்துக்கொண்டு மிகுந்த கோபத்துடன் சிங்கத்தின் குகைக்குள் சென்றது. அங்கு இரையை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்கம், 'நிம்மதியாக உண்ண விடாமல் இடையே வந்து கெடுக்கிறானே' என் கோபமாக கழுதைப்புலியைப் பார்த்தது.
சிங்கத்தின் சிவந்த கண்களையும், அதன் வெறிப்பார்வையையும் பார்த்த கழுதைப்புலி மிரண்டு போனது.
'என்ன வேண்டும்' உனது பங்கைத்தான் கொடுத்து விட்டேனே. அப்புறம் ஏன் என்னை நிம்மதியாக உண்ணவிட மாட்டேன் என்கிறாய்? என்று கோபமாக சிங்கம் கேட்டது.
ஆகா! இப்போது பங்கைப் பற்றிக் கேட்டால் சிங்கத்தின் கோபம் உச்சத்தை எட்டிவிடும்' என்ற அச்சம் ஏற்பட்டது கழுதைப்புலிக்கு. "சிங்க ராஜாவே! நீங்கள் அனுப்பிய பசுவின் பங்கு கிடைத்தது. என்றாலும் பெருமைக்கும், வீரத்திற்கும் இலக்கணமான தங்களிடமே இதனைக் கொடுத்து விடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்" என்று கூறி பசுவின் மாமிசத்தை சிங்கத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டது.
இதுதான் யதார்த்தம். பலசாலியுடன், அவனது பலத்தை நன்கு அறியாமலோ, அல்லது ஏதோ ஒரு அவசரத்தனத்தாலோ மோதச் சென்றால், உடனடியாக உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பின் வாங்கிவிடுவதுதான் நல்லது. அதன்பிறகு எப்போதாவது வரும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து பாயவேண்டும்.