
'பிடிவாதத்தின்' மேல் பாசம் வையுங்கள். நியாயங்களையும் சத்தியத்தையும் என்றுமே காத்து நிற்பேன் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலேயும் இந்த நிலையிலே இருந்து தவறாதீர்கள். இத்தகைய கொள்கைகளில் அழுத்தமான பிடிவாதத்தைக் கடைபிடியுங்கள்.
மனச்சாட்சி ஒத்துக்கொண்ட செயல்களில் திடமான நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, பிறருக்காக உறவு முறைகளுக்காக கையூட்டுக்காக, சின்னஞ்சிறு சபலங்களின் சுகத்திற்காக, இயல்புகளை மாற்றிக் கொள்ளாத பிடிவாதக் குணம் உங்களுக்குள் வந்தாக வேண்டும்.
வெள்ளையர் ஆதிக்கம் இந்த மண்ணிலே வேரூன்றிய காலம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காந்தியாரை பேச்சு வார்த்தைக்காக லண்டன் நகருக்கு அழைத்தது. மகாராணியாரைப் பார்க்க வேண்டுமானால், பார்க்கச் செல்வோர் சிலபல சம்பிரதாயங்களான ஆங்கிலேய பிரபுக்களின் உடை அணிந்துதான் பார்க்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த காலம்.
காந்தியிடம் "உடை" விஷயத்தைக் கூறி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் காந்தியார் "இந்த உடை எங்கள் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது. உடையை மாற்றிக்கொண்டுதான் வரவேண்டும் என்றால் மகாராணியாரின் சந்திப்பை இழக்கவும் தயங்கமாட்டேன் என்றார். இந்தப் பிடிவாதம்தான் மகாராணியாரை மண்டியிடச் செய்தது.
சுயக்கட்டுப்பாடு மனத்தை பக்குவமாக வைத்துக்கொள்ள உதவும். நமது ஆற்றலையும் திறமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மனக்கட்டுப்பாடு. அன்பு, நாணம், உலகத்தாரோடு ஒட்டி உறவாடுதல் அருள்புரிதல், உண்மை பேசுதல் இவற்றை சான்றோர் பண்பு என்பார் வள்ளுவர்.
நமது செயல்கள் எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் பெறுகிறதோ அதன் எதிரொலியாகத்தான் நமது சிறப்பும் பெயரும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும். தனக்குத்தாளே சோதனை செய்து வென்றதாலேயே காந்தியார் மகாத்மாவாக பூஜிக்கப்பட்டார்.
எனவே உங்களுக்குள் பிரகாசிக்கக் கூடிய மகத்தான தலைமைக்குரிய தகுதி குடியிருக்கின்றது. சில பழக்கங்களை வழக்கமாக கொண்டால் நீங்களும் சான்றோராக உன்னதமான நேர்மையான தலைவராக மகாத்மாவாக எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.
நம்முடைய வெற்றியும் தோல்வியும் கூக்குரல் நிறைந்த போலியான வாழ்த்தொலிகளிலேயும் கூட்டங்களின் கைதட்டல்களிலேயும் இல்லை. அவை உங்கள் ஒழுக்கத்திலேயே இருக்கின்றன என்றான் புதுக்கவிதைக் காவலன் வால்ட் விட்மன்.
உன்னைக் கடைசியாக நேசி உன்னை வெறுப்பவர் களைப் போற்று. அச்சத்தை விடு. நீ எதிர்பார்க்கும் நோக்கங்களெல்லாம் உன் நாட்டிற்காகவும் உண்மைக்காகவும் இருக்கட்டும். அந்நிலையில் நீ வீழ்ந்து போனாலும் மகாத்மாவாகி விடுவாய்" என்றார் ஆங்கில நாடகப் பேராசான் ஷேக்ஸ்பியர்.
மனிதர்களது நேர்மையை அவர்களது ஒழுக்கத்திலேயிருந்துதான் கணக்கிட முடியும். அவர்கள் செய்கின்ற தொழில்களை வைத்து அளவிட முடியாது.
ஆகவே, ஒழுக்கத்தை பிடிவாதமாக கடைபிடியுங்கள்.