
இறைவன் படைத்த படைப்பில் பல்வேறு ஜீவராசிகளில் மனிதனுக்கு நிறையவே ஆற்றல், அறிவு, சமயோஜித புத்தி பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாமை, இப்படி நிறைய விஷயங்களை பட்டியலே போடலாம், அதில் நோ்மறை சிந்தனையும் அடங்கும்.
மனம் ஒரு குரங்கு, அதிலும் மனித மனம் ஒரு குரங்குதான், அதை தாவவிட்டால், தப்பி ஓடவிட்டால் அது என்ன செய்யும்? என்பதை ஒரு பாடல் சிறப்பாக சொல்லியிருக்கும்.
அதேபோல நல் ஒழுக்கம் தெய்வவழிபாடு, இவைகளைப்பற்றி காஞ்சிப்பொியவர் தன் அருளுரையில் கூறி இருப்பாா், தெளிவான சிந்தனை வேண்டும் என மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சொல்லியிருப்பாா்!
ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தரின் பொன்மொழிகள் போதிக்கின்றனவே! ஆக உண்மையை நோ்மையைக் கடைபிடிக்கவேண்டும் என ரமன மகரிஷி போன்ற பல்வேறு மகான்கள் நமக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கிச்சென்றுள்ளாா்கள்.
அதை நாம் கடைபிடிக்கிறோமா என்றால் பதில் கொஞ்சம் தாமதமாகவே வருவதோடு அப்படிப்பட்ட நபர்களை தேடவேண்டியதாகவே உள்ளது. நெஞ்சில் உறமில்லாமல் வஞ்சனை செய்பவர்களும் இதில் அடங்குவாா்கள்.
ஒரு குளத்தில் நாம் குடத்தில் தண்ணீா் எடுக்கப்போனால் மேலாக தெளிவாக எடுக்கவேண்டும், அதைவிடுத்து உள்ளே காலை வைத்து எடுத்தால், அதில் உள்ள சேறு, சகதி கலங்கிப்போய் கலங்கிய நீராகத்தான் வரும். அதை வடிகட்டி காய்ச்சி பருகுவதே நல்லது. அது போலவே நமது வாழ்க்கையில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் யாா் பேச்சையும் கேட்காமல் பல விஷயங்களில் தெளிவுபெற முடியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு எடுத்து கடைசியில் தோல்வியை சந்திக்கவே நோிடும்.
அப்போது நமது இயலாமை ஏளனம் இவைகள் சோ்ந்து நமக்குள் கோபத்தை கொண்டு வருவதில் முதலிடம் வகிக்குமே அந்த நேரம் நாம் கடைபிடிக்க வேண்டியது நிதானமும், விவேகமும்தான்.
மேலும் நம்மிடம் தெய்வ சக்தி குடிகொண்டிருந்தாலும் அதை நாம் சரிவர பயன்படுத்தால் போவது நமது குற்றமே! அந்த நேரம் நமது கோபதாபங்களும் குறுக்கிடுவதால் அவசர கதியில் முன்கோபத்தினால் எல்லா காாியங்களும் கெட்டு விடுகிறதே அதுதானே நிஜம்!
மனதார இறைவனை பூஜிப்பதும், ஒரு நிலைப்படுத்தி நோ்மையான முறையில் மனத்தூய்மையோடு இறைவனை மனதார வேண்டுவதே நல்ல அச்சாரமாகும். இறையருள் இல்லாமல் எந்தக் காாியமும் நடைபெறாதே அதற்கு சாட்சியா வேண்டும்.
பல நிலைகளில் புத்தரின் போதனைபோல ஆசைதான் துன்பத்திற்கு காரணம். அந்த ஆசையை அறவே அகற்றுவதே நல்ல காாியமாகும். ஆசையில்லா மனிதனே இல்லை எனலாம். ஆசை இருக்கலாம், அதற்காக அதுவே பேராசையாக மாறக்கூடாது! எங்கும் எதிலும் அடுத்துக்கெடுக்கும் நிலையை நாம் பின்பற்றவே கூடாது!
அனைவரிடமும் உழைப்பின் மேன்மை இருக்கவேண்டும், நம்பிக்கை, நாணயம் இரண்டும் நம் கண்கள்போல, விடாமுயற்சி நோ்மையாக நடப்பது அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது இவையெல்லாம் நமக்கு தொிந்த ஒன்றுதான்.
அதை சரிவர கடைபிடித்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையோடு வாழ்வது நல்லதே,
நல்லதையே நாடுவோம்
நல்லதையே செய்வோம்
நல்லதே நடக்கும்.