
உன்னை அடக்கி ஆளுகை செய், ஒற்றைக் குறிக்கோளுடன் இரு முறையான பயனுள்ள நோக்கத்தைக்கொள். அதற்கு உன்னையே தடையின்றி ஒப்படைத்துவிடு. இதுவே வெற்றிக்கு வழி என்கிறார் வெளிநாட்டு அறிஞர் ஜேம்ஸ்ஆலன்.
தான் கொண்டிருக்கிற குறிக்கோளில் வெற்றி அடைவதற்கு முதல் தேவை 'அடைய முடியும் என்ற நம்பிக்கை, தொடர்ந்து நீடிக்கும் நம்பிக்கைதான் மந்திரசக்தி போன்று மாறி நம் அறிவை வளர்த்து, திறமையை திடப்படுத்தி, ஆற்றலை வெளிக்கொணர்ந்து நம் சூழ்நிலையையும் மாற்றி அமைக்கிறது.
வெற்றிபெற விரும்புகிறவர் அதற்குரிய செயல்பாடுகளை திட்டமிட்டு செய்வது தேவையானது. பல வெற்றி வீரர்களும், சிந்தனையாளர்களும் தம் அனுபவத்தாலும், அறிவாலும் கண்டறிந்த வெற்றிப்படிகளை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
நம் சமுதாயத்தில் வாழும் மக்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். நன்மை செய்வது, அன்பு காட்டுவது, அக்கறை கொள்வது, துன்பங்களை கண்டு வருந்துவது, துன்பத்தில் இருந்து மீள உதவுவது என்பதுதான் நேசித்தல், பலருக்கு மக்களை நேசிப்பது கடினமாக தெரிகிறது.
ஆனால், சிலர் மக்களை மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், தாவரங்களையும் நேசிக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாவது நாம் மக்களை நேசிப்பவர்களாக மாற வேண்டும். தொழில், வணிகம் ஆகியவையும் சேவைதான். சிறுலாபத்தை பெற்றால் அது சேவை. பெரும் லாபத்தை பெற்றால் அது சுரண்டல். கல்வி, மருத்துவம், ஆதரவு இல்லங்கள் நடத்துவோர் சேவை செய்கிறவர்களாக மாற வேண்டும்.
இவற்றை நன்கு அறிந்தவர் மட்டுமே மக்களை நேசிக்க முடியும். வகை தெரியாமல், வழி தெரியாமல் திகைத்து நிற்பவருக்கு வாய்ப்புகளைக்காட்டி வாழ்க்கையில் மாற்றத்தையும், மறுமையும் பெறுவதற்கு உதவிசெய்வதும் உயர்ந்த சேவையே. நிர்ணயித்த குறிக்கோளை அடைவதற்கான பயணத்தை துவங்கவேண்டும்.
நீங்கள் ஏற்கனவே வகுத்த செயல்திட்டத்தைப் பற்றியும், தொடர்ந்து சிந்தித்திருந்தால் நிறைவேற்ற வேண்டும் என்ற ஊக்கம் உங்களை உத்தி தள்ளும். சமுதாயத்திற்கு தீமை பயக்காத, இழப்பை ஏற்படுத்தாத செயல் திட்டம் உங்களிடம் உள்ளது.
குறையில்லாத நல்ல குறிக்கோளையே நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விநியோகிக்கும் பொருளின் பண மதிப்பைவிட அதனால் மக்கள் பெறும் பயன்மதிப்பு அதிகம். ஆகவே நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்கப்படுவீர்கள் ஒவ்வொரு மாதமும் இலக்கில் வெற்றி பெறும்போது ஆண்டு இலக்கையும் நீங்கள் எளிதாக அடைந்து விடுவீர்கள்.
உங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்ற உழைக்கும்போது சில மாறங்களை சந்திக்க நேரலாம்... ஏமாற்றம் வரும்போது உற்சாகம் என்னும் டானிக்கை உட்கொள்ளவேண்டும். முயற்சியை இருமடங்காக்க வேண்டும் வெற்றியும் இருமடங்காகிவிடும். உழைப்பு ஒன்றுதான்மனிதனை உயர்த்தும்.
ஒவ்வொரு நாளும் ஆயிரம் செங்கற்களை அடுக்கி சிமெண்ட் பூசினால் அழகான ஒரு மாளிகை உருவாகிவிடும். அதேபோல், ஆண்டின் 365 நாளில், 300 நாள் அக்கறையுடன் உழைத்தால் குறிக்கோள் நிறைவேற அடிப்படை அமைந்துவிடும். மீதமுள்ள ஆண்டுகளில் சாதித்து விடுவீர்கள். உங்களது செயல்திட்டத்தை ஒவ்வொரு நாளும் வாய்விட்டுப் படியுங்கள். நடந்தே தீரும் என வாய்விட்டுச் சொல்லுங்கள். நம்பிக்கை வலுப்படும்போது நீங்கள் சாதித்து விடுவீர்கள்.