
நமக்கு ஒரு சின்ன பிரச்னை என்றால்கூட போதும். உடனே மனம் உடைந்து என்ன வாழ்க்கை இது நிம்மதி இல்லை காசு பணம் இருக்கிறது எதிலிருந்து என்ன பிரயோஜனம் எதுவுமே இல்லையே என்ற விரத்தியில் நம்மில் பல பேர் இருக்கிறார்கள்.
கவலை என்பது உருவாவது இல்லை. நாமலே உருவாக்கிக் கொள்வதுதான் கவலை. நம் ஒவ்வொரு கவலைக்கு பின்னாலும் நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை நிச்சயம் நமக்கு உணர வைக்கும். காசு பணம் எல்லாம் இருக்கு, ஆனால் நிம்மதி இல்லை என்னிடம் கவலைதான் இருக்கிறது என்று கூறுபவர்கள் இடம் அந்த கவலைக்கு யார் காரணம் என்ன காரணம் என்று ஆராய சொல்லுங்கள் பார்ப்போம்.
நமக்கு வரும் போராட்டங்களை எதிர்கொள்ள எப்பொழுது நமக்கு துணிச்சல் பிறக்கிறதோ அப்பொழுது நம்மிடம் கவலை எட்டிக்கூட பார்க்காது என்பதே உண்மை. அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை தான் இது.
பெரியவர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய ஊருக்கு வந்தார். தன் நெருங்கிய நண்பரின் மகன் எப்படி இருக்கிறான் என்பதைக் காண்பதற்காக, அவன் வீட்டிற்குச் சென்றார்.
அவனைப் பார்த்து, "எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன," என்று கேட்டார்.
கண் கலங்கிய அவன், "இங்கே எனக்கு வாழ்க்கையே போராட்டமாக உள்ளது. சிக்கலுக்கு மேல் சிக்கலான பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று புலம்பினான்.
"உன் தந்தையார் போதுமான செல்வம் சேர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். பிறகு உனக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டார்.
"பணம் இருந்தால் மட்டும் போதுமா? என் துன்பங்களை நீங்கள் சுமப்பதாகச் சொல்லுங்கள். என் செல்வங்களை எல்லாம் உங்களிடம் தந்துவிடுகிறேன்." என்றான்.
அவனிடம் பேசப்பேச அவன் பரிதாபமான நிலையில் உள்ளான் என்பதை அவர் உணர்ந்தார்.
"துன்பமோ, கவலையோ இல்லாத இடம் ஒன்று உள்ளது. நாளை நான் உன்னை அங்கு அழைத்துச்செல்கிறேன் அங்குள்ள யாரும் துன்பப்படுவதாக எனக்குத் தெரியவில்லை." என்றார்.
"நாளை காலையிலேயே அங்கு செல்லலாமா?" என்று ஆர்வத்துடன் கேட்டான்.
"செல்லலாம்." என்றார் அவர்.
மறுநாள் காலையில் அவனை அவர் இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார்.
"எனக்கு தெரிந்து இந்த இடத்தில் உள்ளவர்களுக்குத்தான் எந்தச் சிக்கலும் இல்லை. வாழ்க்கை என்றால் போராட்டங்கள் வரத்தான் செய்யும். அவற்றை வெற்றி கொள்வதுதான் நம் திறமை. கோழைகளைப்போல அவற்றைக்கண்டு அஞ்சினால் மேலும் மேலும் சிக்கல்கள் தோன்றத்தான் செய்யும்" என்றார்.
உண்மையை உணர்ந்த அவன், "ஐயா! உங்கள் அறிவுரைக்கு நன்றி. என் வாழ்க்கைப் போராட்டங்களைத் துணிவுடன் சந்தித்து, அவற்றைத் தீர்க்க முயற்சி செய்வேன். இனிமேல் புலம்பமாட்டேன்." என்றான்.
அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய நிறைவில் அவர் அங்கிருந்து சென்றார்.