
நாம் சிலரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எப்படி இருக்கிறீர்கள்? வேலையெல்லாம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்று சாதாரணமாக கேட்டால் கூட ஏதோ இருக்கிறேன்.
எல்லா வேலையையும் கவனிப்பதற்கு நேரம் போதவில்லை என்று கூறுவார்கள். இன்னும் சிலர் பொழுது எல்லாம் நல்லபடியாக முடிகிறது என்று பதில் அளிப்பர். எல்லோருக்கும் உள்ள நேரம்தான் அது. அந்த நேரத்திற்குள் அவரவர் செவ்வனே கடமையை செய்தால் இதுபோல் திண்டாட வேண்டியது இருக்காது. அதற்கு காந்தியடிகளை நல்ல எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
அவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாது ஆத்மீக ஞானியாகவும் விளங்கினார். இரண்டும் ஒருவரிடத்தில் சங்கமம் ஆகிறது சாமானிய காரியமல்ல. அவருக்கு அளிக்கப்பட்டது நமக்கு போன்று ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால் அதனை அவர் எவ்வாறு பல காரியங்களுக்கான வகுத்துக்கொண்டார் என்பதை கவனித்தால், அது நமக்கு நல்ல மோட்டிவேஷன் ஆக இருக்கும்.
பிறரால் தாங்க முடியாத அரசியல் சுமைகளை தான் ஒருவரே தனித்து சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அவர் பிரார்த்தனை செய்வதை நிறுத்தவில்லை. உலாவச் செல்வதை நிறுத்தவில்லை. பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுவதையோ ,அறிக்கைகள் வெளியிடுவதையோ, நண்பர்களையும், நோயாளிகளையும் சந்தித்து உரையாடுவதையோ, அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையோ, நூல் நாற்பதையோ நிறுத்தினாரா?
அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதை செய்யும்பொழுது அதற்கு குறைவாகவும் கிடையாது அதிகமாகவும் கிடையாது வாழ்க்கை குழப்பம் என்பது இல்லாது போகும். நேரம் போதவில்லையே என்று முணுமுணுப்பும் வராது. மலை போன்ற வேலைகளுக் கிடையில் அவர் மொழிகளை கற்பதற்கான நேரத்தை ஒதுக்கி தமிழ் உட்பட ஆறு மொழிகளைக் கற்றுக்கொண்டது எல்லோருக்கும் வியப்பளிக்கக் கூடிய காரியமே. இவ்வாறு இங்கே காந்திஜியின் காலக்கணிப்பு பணி ஒழுக்கத்தைக் காட்டுகிறது.
ஆதலால், முன்னேற துடிப்பவர்கள் காந்திஜியைப் போன்று முன்னுதாரண உடை அணியவோ, நெய்யவோ முடியாவிட்டாலும், தியாகத்தில் குளிக்க முடியவில்லை என்றாலும், நாட்டுக்காக அவரைப் போல் உழைக்க முடியவில்லை என்றாலும், அவரைப் போன்று அகிம்சையை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், அவரைப் போன்று பகைவனுக்கும் இரங்குகின்ற இந்த மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள விட்டாலும், அவரைப் போல் எளிமையாக வாழாவிட்டாலும், முன்னேறத் துடிக்கும் இளைய சமுதாயம் தங்களது சுயநலத்திற்காகவாவது காந்திஜியை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
இதனால் கடிகாரம் போன்று அவர்களுடைய வாழ்நாள் கழிந்து கொண்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை வகுத்து வைத்திருப்பதால் எதற்கும் அவசரப்படவும், ஆத்திரப்படவும் மாட்டார்கள். அதற்கான தேவையும் இருக்காது. தங்கள் வாழ்நாளுக்குள் மாபெரும் செயல்களை நிறைவேற்றி வெற்றிகான முடியும்.