
உயிர்ப்போடு இருப்பது என்றால் வெறுமனே சுவாசித்துக் கொண்டிருப்பதல்ல. வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எதிர்கொள்வதுதான் நம்மை உயிர்ப்போடு இருக்க வைக்கும். உயிரோடு இருப்பது மட்டுமல்ல உயிர்ப்போடும் இருப்பதுதான் சிறந்தது. வெறும் உடல் ரீதியாக வாழ்வது உயிரோடு இருப்பது என்பதைக் குறிக்கும்.
ஆனால் உயிர்ப்போடு இருப்பது என்பது வாழ்வில் உற்சாகமாகவும், ஆர்வத்துடன் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் வாழ்வதைக் குறிக்கும். ஏதோ இருந்தோம், சொன்ன வேலையை செய்தோம், தூங்கினோம் என்று சாதாரண வாழ்க்கை வாழாமல் உயிர்ப்புடன் வாழ்வதுதான் சிறந்தது. அதற்கு உற்சாகத்துடன் வாழ்வதற்கான நோக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் ஆர்வத்துடன் செய்து, அதில் நம்மால் சாதிக்க முடிந்ததை சாதித்து வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும்.
அர்த்தமுள்ள செயல்களை செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சியும், மனநிறைவும் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும். உயிர்ப்போடு இருப்பதற்கு முதலில் நாம் புதிய அனுபவங்களை தேடிச்செல்ல வேண்டும்.
புதிய இடங்களுக்கு செல்வது, புதுப் புது விஷயங்களை கற்றுக்கொள்வது, விதவிதமான உணவுகளை சுவைத்து ருசி பார்ப்பது போன்ற வாழ்க்கையில் உற்சாகம் தரும் விஷயங்களைத் தேடிச்செல்ல வேண்டும். புதிய இடங்களுக்கு செல்வது நல்ல அனுபவத்தைத்தரும். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வது நம்மை சுவாரஸ்யமாக்கும். வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தும்.
பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது நம்மை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளும். நமக்கு பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபடுவது, ஏதேனும் ஒரு கலையில் ஈடுபாடு கொண்டு அதை கற்றுக் கொள்வது, நல்ல பொழுது போக்குகளை உண்டாக்கி கொள்வது போன்றவற்றில் நம் மனதை செலுத்துவதன் மூலம் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமாக வாழமுடியும்.
அடுத்ததாக நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகமுடியும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு நல்ல உறவுகளைப் பேணுவது நம்மை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். தியானம் செய்வது ஒருமுகப்படுத்தும் தன்மையையும், மன அமைதியையும் அதிகரிக்கும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதன் மூலம் நம்மை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள முடியும். தினமும் சிறிதளவு உடற்பயிற்சி செய்வது, சரிவிகித உணவைப் போதுமான அளவு எடுத்துக்கொள்வது, தினமும் இரவில் போதுமான நேரம் உறக்கம் கொள்வது என்று இருப்பதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இயற்கையுடன், இயற்கையான சூழலுடன் இணைந்திருப்பதன் மூலமும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.