
இலக்குகளை அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உங்கள் வாழ்க்கையின் இத்தகைய செயல்பாட்டு வளர்ச்சி சாத்தியக்கூற்றை அறிந்து கொள்வதை நோக்கிய உங்களின் முதல் சிறிய முயற்சியானது, உங்களின் தனிப்பட்ட மற்றும் சமூக இலக்குகளை வகுத்துக் கொள்வதற்கானது. உங்கள் இலக்குகளின் அர்த்தம் என்ன? என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் சுயபரிசோதனையில் ஈடுபடத் தொடங்க வேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிட வேண்டும். இந்த திட்டமிடுதலில், ஒரு தனிநபர், சமூக உறுப்பினர், நாட்டின் குடிமகன், பெற்றோரின் பிள்ளை, ஒரு குழந்தையின் பெற்றோர். ஒரு சகோதரன் அல்லது சகோதரி மற்றும் அடுத்த தலைமுறைக்கான ஒரு வழிகாட்டி என்ற வகையில், உங்களுக்குள் உள்ள பலவித சமூகப் பரிமாணங்கள் உங்களிடம் தாக்கம் செலுத்தும்.
நீங்கள் யாராக அறியப்பட விரும்புகிறீர்கள்? மற்றும் எந்த விஷயத்திற்காக புகழடைய விரும்புகிறீர்கள்? உங்களுடைய குழந்தைக்கு எந்தவகையில் ஒரு நல்ல பெற்றோராக இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் நாட்டிற்கு எப்படிப்பட்ட குடிமகனாக இருக்க விரும்புகிறீர்கள்? மற்றும் எது உங்களுக்கு நீடித்த திருப்தியைத்தரும்? போன்ற பலவாறான கேள்விகள் அலைமோதும்.
உங்களின் இலக்குகளைப் பற்றி, வாழ்வின் பல்வேறான அம்சங்களை யோசித்து, அதனடிப்படையில் எழுதி வைக்கவும். அத்தகைய இலக்குகளை அடைவதில் இருக்கும் உங்களின் பலம், பலவீனம், ஆற்றல், திறமை, சாத்தியக்கூறுகள், நெருக்கடிகள், ஆதரவு, வயது, குணாதிசயம் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இலக்கு நிர்ணயித்தல் என்பது, ஒரு முழு செயல்பாட்டிற்கு தயாராதலின் இறுதி நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
உங்களின் இலக்குகள் பிரமாண்டமானதாகவும், பிரமாதமானதாகவும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, தெளிவானதாகவும், சாத்தியப்படக் கூடியதாகவும் இருந்தாலே போதும். உங்களின் மிகச்சிறிய இலக்குகூட, தேவைப்படும்போது எளிய அல்லது பெரிய முடிவுகளை நீங்கள் எடுக்கையில் மிகவும் உதவியாக இருக்கும்.
உதாரணமாக, உங்களின் தனிப்பட்ட இலக்குகளில் ஒன்று, உங்களுக்கான நோயற்ற, ஆரோக்கிய வாழ்வைத் தருவதாக இருக்கலாம். அத்தகைய இலக்கானது, நீங்கள் துரித உணவகம் செல்லும்போதோ, பீசா அல்லது பர்கர் ஆகியவற்றை சாப்பிட நினைக்கும்போதோ, உங்களுக்கு எச்சரிக்கை ஊட்டி, உங்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உதவிபுரியும்.
தற்போதைய உலகம், நிச்சயமின்மை, சிக்கல்கள், நெருக்கடிகள், ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் நிறைந்தது. எனவே, நமது இலக்கானது, சரியாக அடையப்படுமா? என்பதை நம்மால் உறுதி செய்ய இயலாது நிலையே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால், நமது வாழ்க்கை, நம் கையில் இல்லை என்று சொல்லும் நிலையே உள்ளது. நாம் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
எனவே, உங்களின் இலக்குகளை நிர்ணயிக்கையில், சற்றே திறந்த மனதுடனும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியக் கூறுகளையும் மனதில் கொண்டே செயல்படவும்.
நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி செல்கையில், ஒரு எதிர்பாராத நிகழ்வு அதை அடையவிடாமல் உங்களை வழிமாறச் செய்துவிட்டாலும், மனம் தளர்ந்துவிடாமல், வேறொரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுமளவு. மனவலிமையையும், நெகிழ்வையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். மனம் தளர்ந்து போனால் இலக்குகளை நம்மால் எட்டிப்பிடிக்க முடியாது.