
ஆசை இல்லாத முயற்சியால் ஒரு பயனும் இல்லை. அதேபோல் தான் எந்த முயற்சியும் இல்லாத ஆசையால் ஒரு பயனும் இல்லை. நாம் வெற்றியடைவதை நம்மைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. ஆசைப்படுவது என்பது நேரத்தை வீணடிப்பதாக நினைப்பது தவறு. நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தவும், நமக்கு ஒரு நோக்கத்தை அளிக்கவும், அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும் நமக்கு தேவை ஆசையே. ஆசை இல்லையென்றால் எடுக்கும் முயற்சியால் ஒரு பயனும் இல்லை.
ஒன்றின் மீது ஆசை வைக்கும் போதுதான் அதை அடைவதற்கான முயற்சியை எடுக்க தோன்றும். ஆசைப்படுவதுதான் நம் இலக்கை அடைய ஒரு உந்துகோலாக இருக்கும். அனைத்திற்கும் ஆசைப்படலாம் அதுவும் பெரிதாக ஆசைப்படலாம் தவறில்லை.
அது நம்மை அடைய வேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்க வைக்கும். முன்னேறிச் சென்று நாம் ஆசைப்பட்டதை அடைவதற்கு வழி வகுக்கும். ஆசைப்படுவது நமக்குள் ஒரு நல்ல நம்பிக்கை உணர்வைத்தரும்.
ஆசைப்படுவது என்பது வாழ்க்கையை பற்றிய நேர்மறையான பார்வையை கொடுக்கும். நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். நம் மனதை ஒருமுகப்படுத்தி நாம் ஆசைப்பட்டதை அடைவதற்கான உத்திகளை கையாளும். ஆனால் எந்த முயற்சியும் இல்லாது வெறும் ஆசை மட்டும் கொள்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. ஆசையை நிஜமாக்குவதற்கு உழைப்பு மட்டுமே தேவை. விருப்பப்பட்டதை நிறைவேற்ற தீவிர முயற்சி தேவை.
எந்த ஒரு ஆசையும் இன்னொரு ஆசைக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கக்கூடாது. எந்த ஒரு விருப்பமும் இறுதியானது அல்ல. மற்றொரு ஆசைக்கு வழிவகுக்கும். ஆரம்பத்தில் ஆசைப்பட்டதை அடைந்ததும் திருப்தி ஏற்படும். பின்னர் அதுவே இயல்பாக மாறி புதுப்புது விருப்பங்களாக உருவெடுக்கும். எல்லா ஆசைகளையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. அதற்காக ஆசைப்படுவதே தவறு என்பது கிடையாது. தேவையானவற்றிற்கு ஆசைப்படுவதும் அவற்றை அடைவதற்கான உந்துதலைப் பெறுவதும் சிறப்பு.
ஆசையை அடைவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். முயற்சி திருவினையாக்கும். ஆசைப்பட்டதை அடைய நேர் வழியில் எந்த சூழ்நிலையிலும் முயற்சி செய்ய தயங்கக்கூடாது.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்கிற வள்ளுவரின் கூற்றுப்படி நாம் ஆசைப்படுபவற்றை அடைய முயற்சி செய்யவேண்டும். ஆசை இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை. புத்தருக்கு கூட ஆசையை ஒழிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அது வெறும் ஆசையாக மட்டுமில்லாமல் முயற்சி செய்து அதை அடைவது மிகவும் முக்கியம். செய்வோமா?