

கவர்ச்சியும், ரசனையும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. பூக்களின் அழகு வண்டுகளை வசீகரிக்கிறது. அதேபோல் வண்டுகளின் ரசனை உணர்ச்சி பூக்களை நாடிச்செல்ல செய்கிறது. இயற்கை தன்னுடைய நோக்கத்தை கவர்ச்சியின் மூலம் ரசனையை பூர்த்தி செய்து கொள்கிறது.
ரசனை உணர்ச்சி இல்லாமல் வாழ்க்கைச் சக்கரம் சுழல முடியாது என்பதே இயற்கை நமக்கு உணர்த்துகிறது. இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமான ரசனையை தாவரங்களில் மட்டுமல்ல வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் பார்க்க முடியும்.
ஆண் சிங்கம் கம்பீரமாக பிடரியோடு காட்சியளித்து பெண் சிங்கத்தை கவர்கிறது. அதேபோல் ஆண் மயில் அழகான தோகை விரித்து பெண் மயிலைக் கவருகிறது.
காளையின் கம்பீர உருவம் பசுக்களை ஈர்ப்பது போல், வெவ்வேறு பறவை இனங்களில் கூட சில பறவைகள் இனிய குரல் ஓசை எழுப்பி உறவுக்கு அழைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான இலக்கியங்கள் மனித சமுதாயத்தில் உள்ள ஆண், பெண் கவர்ச்சி பற்றி பேசுகின்றன. ஆண், பெண் வாழ்வுக்கு ரசனை அடித்தளமாக இருக்கிறது. இயற்கையின் ரசனையை மனிதன் புறக்கணிக்கும்போது விபரீதங்கள் ஏற்படுகின்றன.
இயற்கையிலும், செயற்கையிலும் நம்மைச் சுற்றி கவர்ச்சியும் ரசனையும் பிரிக்க முடியாமல் பிணைந்து இருக்கிறது. நாகரீகம் என்பது கூட நமது ரசனையின் வெளிப்பாடுகளாகவே அமைகின்றன.
வசிக்கத்தான் வீடு என்றாலும் அது அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். மானத்தை மறைப்பதற்குத்தான் துணி என்றாலும் கவர்ச்சியான உடைகளாக மாற்றி அணிந்துகொள்கிறோம். நாம் செய்கின்ற சிறிய காரியத்தில் இருந்து பெரிய காரியம் வரை அழகுடன் அமையவேண்டும் என்று விரும்புகிறோம்.
பசிக்குதான் உணவு என்றாலும் அதற்கு சுவை தேவை என்று மனிதன் எண்ணுகிறான். ஆகவே மனித வாழ்க்கையின் இன்பம் அனைத்தும் அழகும் ரசனையும் இன்றியமையாத விஷயங்களாக இருக்கின்றன.
மனிதன் ரசனையை வளர்த்துக் கொள்ளாமல் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாது. இதை வளர்த்துக் கொள்ள தவறிவிடுபவர்கள் இருந்தும் இல்லாதவர்களாகவே வாழ்கிறார்கள்.
மனித உறவுகளையும் ரசனை உணர்ச்சி தான் முடிவு செய்கிறது. வெறும் தோற்றத்தை மட்டும் ரசிப்பது ரசனை உணர்ச்சி அல்ல. மற்றவர்களின் நல்லியல்புகளை ரசிப்பதும் ரசனைதான்.
மனிதன் ஆரோக்கியமான வகையில் உறவுகளை வளர்த்துக்கொள்ள நினைக்கிறபோது புறக்கவர்ச்சியினையும் தாண்டி அக கவர்ச்சி பற்றி சிந்திக்க தொடங்குகிறான். அதன் விளைவாக ஒருவருடைய நல்ல குணங்களை ரசிக்கும்போது அவருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறான்.
புறக்கவர்ச்சி ரசனையால் விளைவது நாகரீகம் என்றால் அக கவர்ச்சியால் விளைவது பண்பாடு மனித உறவுகள் சிறப்பாக அமைய மனிதன் தன்னுடைய ரசனை உணர்வை மேம்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும்.