
ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு பலரின் பங்களிப்பு தேவை. ஆரம்பகட்டத்தில் இருக்கும் சூழ்நிலை அவ்வாறே தொடராது.
நாட்கள் நகரும்பொழுது நிர்வாகம் வளர்ச்சி பாதையில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு செல்லவேண்டி வரும். நிர்வாகம் சிறிய கட்டத்தில் இருந்து அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகர வேண்டியிருக்கும்.
அந்த பயணத்தின்பொழுது பல்வேறு சவால்களை சந்தித்து, கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் தவிர்க்க முடியாத அம்சமாகிவிடும்.
தொழில் துவங்கும் பொழுது, அதை துவக்கிய குறிப்பிட்ட நபர் (பொதுவாக அதிக முதல் போட்டவர்) சம்பந்தப்பட்ட எல்லா துறைகளையும் தனது பார்வை, கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முற்படுவது இயற்கையானது. அந்த சூழ்நிலைக்கு பொறுத்தமான தாகவும் அமையக்கூடும்.
தனிநபர் ஒருவரே வியாபாரம் அல்லது தொழிலை நடத்துவதில் சில நன்மைகள் இருக்கக்கூடும்.
வியாபாரம் அல்லது தொழில் எப்படி நடக்கின்றது, அதை நடத்த அன்றாட தேவைகள் எவை, எப்படி அவற்றை கொள்முதல் செய்வது, ஒருவேளை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தால் அது சம்பந்தமானவற்றை எப்படி செயல்படுத்துவது, தேவைக்கு ஏற்ற பணம் எப்படி, எவ்வாரு ஏற்பாடு செய்வது போன்ற விவரங்கள் குறிப்பிட்ட நபருக்கு முழுமையாக தெரிய அதிக வாய்ப்புக்கள் இருக்கும். அதனால் அவரால் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வியாபாரத்தை நன்கு நடத்த முயற்சிக்க முடியும்.
இவைகளை தவிர வியாபாரத்திலும், வெளி உலகிலும் மேலும் சில சவல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவை பொருட்கள் வாங்குவதற்கு சம்மந்தப்பட்டு இருக்கலாம், தயாரித்த பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இருக்கலாம் அல்லது பணிசெய்பவர்கள் எதிர் பார்ப்புக்கள், பிரச்னைகள் குறித்தும் இருக்கலாம்.
தனிப்பட்ட ஒரு நபர் இப்படி பலதரப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதும், கையாள்வதும் அவ்வளவு சுலபமில்லை, புத்திசாலி தனமும் கிடையாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையை செவ்வன கடக்க அந்த குறிப்பிட்ட நிறுவனர், முதலாளி, நபர் பின்பற்ற வேண்டியது அதிகாரத்தை பகிர்ந்தளித்தல். (implement delegation of powers).
வளர்ந்து வரும் வியாபாரம் மேலும் தழைத்து ஓங்க, சில முக்கிய முடிவுகள் எடுத்து செயல்படுத்தவேண்டும்.
சில அனுபவம் மிக்க நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் அளித்தல் அத்தியாவசியமாகின்றது.
இவ்வாறு செய்வதால் முதலாளி, நிறுவனரின் அனாவசிய சுமைகள் வெகுவாக குறைக்கப்படும்.
ஒருவரே செய்து வந்த இடத்தில் மூன்று அல்லது நான்கு அதிகாரிகள் உரிய அதிகாரங்களுடன் செயல்படுவதால் பணியும் நேர்த்தியாகவும், விரைவாகவும், தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப செயல்பட அதிகபடி வாய்ப்புகள் அமையும்.
அவ்வாறு அதிகாரங்களை பங்காளித்து கொடுப்பதால், அப்படி கொடுக்கப்பட்ட நபர்களுக்கு பொறுப்பகளையும் நிர்ணயித்து தரலாம்.
முதலாளி, நிறுவனர் மேற்பார்வை செய்வதாலும், பொறுப்பு அளித்துள்ள அதிகாரிகள் இவருக்கு அவ்வப்பொழுது நடைப்பெறும் தொழில் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரியப் படுத்த வேண்டியிருப்பதால் தொழில் அல்லது வியாயபாரம் நன்கு செயல் பட்டு முன்னேற இப்படிப்பட்ட அதிகார பங்களித்தல் மிகவும் உதவிகரமாக விளங்கும்.