
உழைக்காமல் ஒருபோதும் செல்வம் சேராது. ஏன், அன்றாட வாழ்வு கூட உழைப்பில்லாமல் நடக்காது. சிலர் சோம்பேறியாக இருந்து, எப்படியோ சாப்பிட்டு காலம் தள்ளுவர். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் வேறு யாரோ ஒருவர் உழைத்துச் சம்பாதிப்பதையோ, அல்லது முன்னோர் உழைத்துச் சம்பாதித்து வைத்ததைக் கொண்டோதான் இவர்கள் சோம்பேறிகளாக சாப்பிட்டுக் கழிக்கிறார்கள் என்கிற உண்மை புரியும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 'இறைவன் ஒவ்வொரு பறவைக்கும் உணவு அளிக்கிறார். ஆனால் அதை அவர் பறவையின் கூட்டில் கொண்டு வந்து வைப்பதில்லை' என்பதே அந்தப் பழமொழி.
உழைக்காமல் கிடைப்பது மரணம் ஒன்றுதான் என்பார்கள். அந்த மரணம் கூட, சிலர் உழைக்கும் காலத்தில் உழைத்து சேமித்து வைக்காததால்தான், இறுதியில் நாதியற்று நடுவீதியில் அல்லது உற்றார் உறவினரால் கைவிடப்பட்டு பாயும் படுக்கையுமாகக் கிடந்து உயிர் துறந்திருக்கிறார்கள்.
நாம் இருக்கும் இடம், நடக்கும் சாலை, போகும் வாகனம் எல்லாம் பிறர் உழைப்பால் உருவாக்கியவை.
எனவே மனதை ஒருமுகப்படுத்த, உழைப்பை ஒரு நோக்கில் செலுத்த, குறிக்கோளைத் தீர்மானியுங்கள். உங்கள் ஆசை உங்கள் இயல்பு, உங்களுக்குத் தெரியும். உங்கள் இயல்புக்கும் உங்கள் ஆசைக்கும் பொருத்தம் இருக்க வேண்டும். பொருந்துகிற மாதிரியான ஆசையைத்தான் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
முயற்சி திருவினை ஆக்கும் என்றாலும். அது உங்கள் சக்தி திறன். உழைப்பு ஆகியவற்றால் நிச்சயம் நிறைவேறிவிடும் என்று உங்களுக்கே நம்பிக்கை இருக்க வேண்டும்.
அந்த நம்பிக்கை சதாகாலமும் உங்களைச் செயல்படத் தூண்டிக் கொண்டே இருக்கவேண்டும். உங்கள் எண்ணம் சொல், செயல், எல்லாம் அதையொட்டியே இருக்க வேண்டும் அப்படிபட்ட ஆசை எதுவோ அதில் முழு மூச்சோடும் ஈடுபடுங்கள்.
சிலருக்கு இது ஒன்றில்தான் ஆசை என்பதில்லை. எல்லாவற்றிலும் ஈடுபடவும், அதில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களைப் பார்த்து விட்டு அதேபோல் தானும் முயற்சியில் இறங்கவும் நினைப்பார்கள்.
பொதுவாக குழந்தை உள்ளம் படைத்தவர்கள், மனஉறுதி இல்லாதவர்கள், சிறுவயது முதல் பிறரால் அடக்கி ஒடுக்கப்பட்டு வளர்ந்தவர்கள். தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் - இப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த பலவீனம் இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் திறமை, அடிப்படை அறிவு இருக்கலாம். அதனால் அந்த வகைத் துறைகள் எதில் ஈடுபட்டாலும் அவர்கள் அந்தக் துறையில் வெற்றிக்கொடி நாட்டி விடமுடியும் என்று சொல்லமுடியாது.
பரந்த அறிவு என்பது வேறு, ஆழ்ந்த அறிவு என்பது வேறு.
ஒருவருக்கு பல துறைகளில் ஈடுபாடும் ஒவ்வொன்றிலும் ஓரளவு அறிவும் உள்ளவரைப் பரந்த அறிவுடையோர் என்பர்.
ஆனால் ஒன்றைப் பற்றி மட்டுமே மிகுந்த ஈடுபாடும் பறிவும் கொள்பவரையே ஆழ்ந்த அறிவுடையோர் என்பர்.
ஆகவே வெற்றியடைய உங்கள் ஆசைக்கும் இயல்புக்கும் ஏற்ற குறிக்கோளை தீர்மானியுங்கள்.