
சிலர் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் செயல்படுத்த மாட்டார்கள். இன்னும் சிலர் எதையாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள். உடனுக்குடன் செயல்படுத்துவார்கள். மற்றும் பலர் கற்றுக்கொள்வார்கள். அதை அப்படியே விட்டுவிடுவார்கள். இதுபோல் அவரவர் வாழ்க்கையில் அவரவர் சந்தித்த நபர்கள் ஏராளம் உண்டு.
எனக்குத் தெரிந்த ஒரு பையன் நன்றாக படிக்காமல் விட்டு விட்டான். அவன் அக்கம் பக்கத்தவர்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல பதவிக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் இவனால் அப்படி செய்ய இயலவில்லை. ஆதலால் அவனது வீட்டினரும், உறவு முறைகளும் எப்பொழுதும் ஏதாவது குத்திக்காட்டி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
படிப்பதற்கு ஒரு புத்தியையும் காணோம். இப்பொழுது இந்த வேலை செய்து பிழைக்கப் போகிறாயா? என்று எந்த வேலை செய்தாலும் ஏதாவது ஒரு கடும்சொல் சொல்வார்கள். அவன் எதற்கும் தயங்கியதில்லை. வருத்தப்பட்டது இல்லை. மாறாக எதையும் கற்றுக் கொள்வதில் தீவிரமானான். முதல் முதலாக போட்டோ எடுப்பதை கற்றுக்கொண்டான். அக்கம் பக்கத்தில் நடக்கும் சின்னச் சின்ன விசேஷங்களை எல்லாம் போட்டோ எடுத்து அவர்களுக்கு பிரிண்ட் போட்டு கொடுப்பதை வழக்கமாக்கினான். இதனால் அவனுக்கு வருமானம் வந்தது.
அதன் பிறகு தோட்ட வேலைகள் செய்வதை வழக்கமாக வைத்தான். அவன் வசிக்கும் ஏரியாவில் யார் வீட்டிலாவது புதிதாக வித்தியாசமாக தோட்டம் அமைத்திருந்தால் அதன் செடி, கொடி,மரங்களை அறிந்து வந்து அவர்கள் வீட்டில் இருக்கும் சிறிதளவு நிலத்தில் அதை செய்ய முயல்வான். அதனால் நல்ல ஒரு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. இடையிடையே தரிசாக கிடந்த நிலங்களை எல்லாம் செதுக்கி செப்பனிட்டு அதில் சாத்துக்குடி, எலுமிச்சை, தென்னை போன்ற மரங்களை வளர்க்க ஆரம்பித்தான். நாளடைவில் அவைகளும் நல்ல பலன் தர ஆரம்பித்தன. இப்படியாக அவன் எதில் கை வைத்தாலும் அதில் நல்ல ஒரு முன்னேற்றமும், வளர்ச்சியும் கிடைப்பதை பார்த்து அவனை எப்பொழுதும் திட்டிக் கொண்டு இருந்த வீட்டினர் நிறுத்திக் கொண்டு, அவனை நல்ல முறையில் பாராட்ட ஆரம்பித்தனர்.
வீட்டினர் பாராட்ட பாராட்ட அனைவருக்கும் அவனுடைய நல்ல உள்ளம் புரிந்தது. அதன் பிறகு ஊரில் யாருக்காவது அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் அவன் வாகனத்தை எடுத்துக் கொண்டுதான் கூட்டிச் செல்வான். டெலிவரியிலிருந்து அவன் ஆட்டோவில்தான் ஏற்றுவான். பிரசவம் போன்ற விஷயங்களுக்கெல்லாம் பணம் வாங்கிக் கொள்ளமாட்டான். திடீர் உதவி என்றால் அவனை நம்பகமாக அழைத்து எல்லோரும் வேலை வாய்ப்பு கொடுத்தனர். இதனால் இப்பொழுது அவனுக்கு நல்ல வருமானம் வர ஆரம்பித்து விட்டது.
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதை அப்படி அப்படியே விடாமல் அனைத்திலும், ஒரு வேலைக்கு ஒரு நாள், மற்றொரு வேலைக்கு இரண்டு நாள், மற்ற வேலைக்கு மீதி நாள் என்று பிரித்துக் கொண்டு செய்வதால் அவனுக்கு உற்சாகம் மேலிடுகிறது. வருமானமும் கிடைக்கிறது. நல்ல பெயரும் கிடைக்கிறது. இதனால் நம்பி அவனை எல்லா விஷயங்களுக்கும் அழைத்துக் கொள்கிறார்கள். ஆதலால் படித்து வேலைக்கு சென்றால்தான் சம்பாதிக்க முடியும். அதுதான் புத்திசாலித்தனம் நல்ல மதிப்பு, பாராட்டையும் ஏற்படுத்தி தரும் என்று என்ன வேண்டியது இல்லை.
படிப்பு வராவிட்டால் எதில் விருப்பமோ அதில் கவனம் செலுத்தினால் இது போல் முன்னேறலாம் என்பதற்கு இது போன்றவர்கள்தான் நல்ல எடுத்துக்காட்டு.
கற்றுக்கொள்ள முயற்சிப்பதும் கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக மாற்றுவதும்தான் வெற்றியின் ரகசியமே!