

சாதாரணமாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம். அப்பொழுது யாராவது ஒரு பெரியவர் வருகிறார் என்றால் அவரைப் பார்த்த மாத்திரமே சட்டென்று எழுந்து வணக்கம் சொல்லுவோம். அதேபோல் தூங்கும்பொழுது கொசு கடிக்கிறது என்றால் உடனே கைகள் கொசுக்களை ஓட்டுகின்றன. உறங்கும் பொழுதே இந்த செயல் நடைபெறுகிறது. அதேபோல் நன்றாக குளிரும்பொழுது நாம் போர்த்தி இருக்கும் போர்வை விலகிவிட்டால் நம் கைகள் அவற்றைத் தேடிச்சென்று எடுத்து போர்த்த முனைகிறது. இப்படி சிந்தித்து முடிவு செய்யாமலேயே பல செயல்களை செய்கிறோம். இது இதைத்தான் அனிச்சை செயல் என்று கூறுகிறோம் .
நாம் குளிப்பதற்கு கொதி நீரை எடுத்துச்சென்றால் அந்த கொதிநீரில் விரலை வைத்து எவ்வளவு சூடு இருக்கிறது என்று பார்ப்போம். சில நேரம் கொதி நீர் நன்றாக விரலை சுட்டுவிடும் .இந்த செய்தி பெருமூளைக்குச் சென்று அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகுதான் கையை எடுக்கிறோமா என்றால் இல்லை.
நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடன் நரம்புகள் செய்திகளை தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. "தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்கு கட்டளை போகிறது.
உடனே அந்த கைத்தசைகள் சுருங்கி கரத்தை நீரில் இருந்து எடுத்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் சுடுநீரின் வெப்பத்தால் ஏற்பட்ட வேதனை "தண்டுவடத்திலிருந்து பெருமூளைக்கு தொடர்ந்து செல்கிறது. எனவே வேதனையை பெருமூளை பதிவு செய்கிறது. சுட்ட இடத்தில் மருந்து போடுவேன் என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால் கரத்தை சுடுநீரில் இருந்து எடுத்த காரியம் பெருமூளையின் உணர்ச்சிக்கு காத்திருக்கவில்லை. இப்படி பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும் செயல்களை தான் அணிச்சை செயல்கள்" என்கிறோம்.
வீட்டில் பெரியவர்கள் ஒரு செயலை இப்படி செய் என்று கூறுவார்கள். ஆனால் நாம் வேறு மாதிரி யோசித்து அச்செயலை செய்வோம். அதுவே பழகிவிடும். மீண்டும் மீண்டும் நாம் பழகியப்படியே அந்தச் செயலை செய்து கொண்டிருப்போம். பெரியவர்கள் அதைப் பார்த்து அணிச்சை செயல்மாதிரி செய்கிறாயே என்று கோபமாக கூறுவார்கள். இப்படி உடலின் அணிச்சை செயல்களில் பல உடன் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாகவே பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன என்பதுதான். ஆனால் பயிற்சியின் மூலம் அணிச்சை செயல்களை உடல் கற்றுக்கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ளனர்.
பொதுவாக சாப்பாட்டை பார்த்தால் நாய்க்கு எச்சில் ஊறும் இது அணிச்சை செயல். தினசரி பத்துமுறை மணி அடித்து சாப்பாடு போட பழக்கினால் அந்த நாய்க்கு சில காலத்திற்குப் பிறகு பத்தாவது முறை மணி அடிக்கும் பொழுதுதான் இரைப்பையில் நீர் கூறும் என்று பாவ்லோவ் நிரூபித்துக் காட்டியுள்ளார். இப்படிப்பட்ட அனிச்சை செயல்களை சூழல் சார்பான அணிச்சை செயல் என்கிறார்.
சொல்லப்போனால் அணிச்சை செயல் உடலின் நிலையப் பொறுத்தது என்பது தெளிவு. களைத்துப்போன தேகத்தில் அணிச்சை செயலின் வேகம் குறையும். பெரு மூளையின் சிந்தனைகளும் அணிச்சைச் செயல்களைப் பாதிக்கும். அச்சம், ஆத்திரம் போன்ற நவரச உள்ளக்கிளர்ச்சிகள் அணிச்சை செயல்களையும் பாதிக்கின்றன என்கின்றனர் முடிவாக!
ஆதலால் நல்ல செயல்களை அணிச்சை செயலாக செய்யும் பொழுது வீட்டிலும் வெளியிலும் பிரச்னை ஏற்படுவது இல்லை. அதுவே பெரியவர்களுக்கு பிடிக்காத செயலாக இருந்தால் அதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது நடைமுறை வாழ்க்கையை பாதிக்கும் நிகழ்வு. ஆதலால் அவர்கள் சொல்வதில் நன்மை இருந்தால் அதை பழக்கப்படுத்திக்கொண்டு, நம்மை இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொண்டு செயல்பட்டு நற்பெயரை பெறுவோமாக!