

தன்னம்பிக்கை பெற்றவர்கள்தான், சமுதாயத்தில், நாட்டில், உலகில், பெயர், புகழ், செல்வாக்கு சொல்வாக்கு பெற்று தலைசிறந்து விளங்குகிறார்கள். வரலாற்றிலும் மக்கள் மத்தியிலும் நீங்கா இடம் பெற்று இருப்பதோடு இறந்தாலும் மனதில் என்றும் நினைவோடு இறவாமல் வாழ்கிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களையே எதிர்த்து கடல் நடுங்க கப்பல்விட்ட வீரத் தமிழன் வ. உ. சிதம்பரனார் தன்னம்பிக்கையின் சிகரமாக திகழ்ந்தார். "பாரதத் தாயின் தவப்புதல்வர்களே எழுங்கள்!" என்று வீரக் குரல் எழுப்பிய வங்காள சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்கினார்.
'செய் அல்லது செத்துமடி' என்ற உறுதிப்பாடும், 'ஒன்றே செய். அதையும் நன்றே செய். அதனையும் இன்றே செய்!' என்ற கொள்கையும் இருந்தால் நாம் ஈடுபடும் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும்.
சிறு முயற்சியுடையோரை இகழ்ந்தும் புலி போன்ற பெரும் முயற்சியுடையோரை புகழ்ந்தும் ஒரு புறநானூற்றுப் புலவர் பாடியுள்ளார். இதையே திருவள்ளுவரும் முயலை குறிவைத்து அம்பு எய்து அதை கொன்றவனைவிட, யானையைக் குறிவைத்து அதை கொல்லமுடியாதவன் மேலானவன் என்று கூறியுள்ளார்.
இதே தன்னம்பிக்கை கருத்தை விண்ணில் குறிவைத்து சுடுகிறவன் இலக்கை தவறினாலும் மரத்தை குறிவைத்து சுடுகிறவனைவிட உயரமாகவே சுடுவான் என்கிறார் ஜார்ஜ் ஹெர்பர்டு.
மாவீரன் அலெக்சாண்டரின் வரலாற்றைப் பிரமிக்கத்தக்க வகையில் எழுதிய புளூடார்க். 'ஒரு சரித்திர மனிதன் தன் வாழ்வில் சின்னஞ்சிறு செயல்களை எவ்வாறு செய்தான்? சிறிய பெரிய துயரங்கள் எதிர்ப்படும்போது அவற்றை எவ்வாறு சமாளித்தான்? என்று உற்றுக் கவனிப்பது சுவை மிகுந்ததொரு செயல்' என்று உரைக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனை உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் உறுதிப்பாடு' என்று மறுமொழி கூறினார். உலகத்தில் நிகழும் அரும்பெரும் காரியங்கள் எல்லாம் தன்னம்பிக்கையில்தான் வெற்றியடைகின்றன.
'மடையர்களுடைய அகராதியில்தான் இயலாது என்ற சொல்லைக் காணமுடியும்'- இது மாவீரன் நெப்போலியன் கூறியது.. 'என்னால் முடியும் என்று முயன்று பாருங்கள். செயலில் கொஞ்சம் இறங்குங்கள் நாம் எண்ணிய செயல்திட்டங்கள் யாவும் வெற்றியில் முடியும். சாதனை விளைச்சலைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.