
மனிதன் நினைத்தால் எத்தனையோ புது வழிகளைக் கண்டுபிடித்து முன்னேற முடியும்; புதிய தொழில்களைத் தொடங்கி ஏராளமாகப் பணம் சம்பாதிக்க முடியும். புதிய வழிகளைக் காண்பதிலும் புதிய முயற்சிகளைத் தொடங்குவதிலும் நமக்குள்ள தயக்கமே நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாகி விடுகிறது.
வேலை கிடைக்காதபோது சோர்ந்து உட்காரவேண்டிய அவசியமே இல்லை. குழம்புவதற்குப் பதிலாக நிதானமாகச் சிந்தித்தால் அடுத்து என்ன செய்யலாம் என்பது புரிந்துவிடும்.
புதிய பாதைகள் நமக்காகக் காத்திருக்கின்றன என்பதை நாம் நம்ப வேண்டும் நம்பி முயன்றால் செல்லவேண்டிய பாதை தெளிவாகும்.
உங்கள் மனத்திற்கேற்ற எந்த துறையிலும் நீங்கள் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நீங்கள் பெறுகின்ற கல்வி பொதுவான தகுதியை உங்களிடம் ஏற்படுத்துகிறதே தவிர, கல்வியின் மூலம் உங்களிடம் உள்ள தனித்திறமைகள் வெளிப்படுவதாக சொல்ல முடியாது.
எதில் உங்கள் மனம் மிகுதியாக ஈடுபடுகிறதோ, அது தொடர்பானவற்றை நீங்கள் ஏற்றுச் செய்கின்றபோது மகத்தான வெற்றியைப் பெறுகிறீர்கள்.
பெர்னாட்ஷா எழுதியுள்ள ஒரு நாடகத்தில் சுவையான சம்பவம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறார். நெருக்கடி ஒன்றின்போது. பாதிரியாராக இருந்த ஒருவர் போர் வீரராகி விடுகிறார். போர் வீரனாக இருந்த ஒருவர் பாதிரியாராகி விடுகிறான்.
இதை நாடகத்தில் சித்தரித்துவிட்டு, ஒரு பாத்திரத்தின் வாயிலாக மிகப் பெரிய உண்மையினை அவர் வெளியிடுகிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்ற தொழில் எது என்பதை நெருக்கடிகளின் போதுதான் தெரிந்து கொள்ளுகிறார்கள் என்கிறார்.
நெருக்கடியின்போது மனிதனிடம் மறைந்துள்ள தனி ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றபோது தனது முழுத் திறமைக்கு அவன் உயர்ந்துவிடுகிறான். இந்தக் கருத்தினை பெர்னாட்ஷா அந்த நாடகத்தில் மிகவும் அருமையாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார். நெருக்கடிகளின்போது நீங்கள் மனஉறுதியுடன் இருந்தால்தான் இது சாத்தியம் ஆகும்.
அதை விட்டுவிட்டால் குழம்ப ஆரம்பிப்பீர்கள். அதனால் உங்களிடம் உள்ள திறமைகள் அனைத்தும் அந்தக் குழப்பத்தில் மூழ்கிப்போகும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எந்த தொழிலையும் செய்யத் தயங்காதீர்கள். தொழிலில் உயர்ந்தது என்றும், தாழ்ந்தது என்றும் எதுவும் இல்லை.
செய்யும் தொழிலே தெய்வம்' என்றார் பாரதியார்.
அதாவது செய்கின்ற தொழிலை வணக்கத்துக்கு உரியதாகக் கருதிச் செய்யவேண்டும். அப்படிச் செய்கின்றவர்கள் வாழ்க்கையில் விரைந்து முன்னேறுகிறார்கள்.
செய்கின்ற தொழிலில் பக்தியும் ஆர்வமும் இருக்கவேண்டும். எதைச் செய்தாலும் புதுமையைச் செய்ய முயற்சி செய்யுங்கள். புதுமைக்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. மக்களை எளிதில் கவருவதற்கு அதுவும் ஒருவழி என்பதை மறந்து விடாதீர்கள்.