
எவ்வளவு சந்தோசமான வாழ்க்கை இருந்தாலும், சமயோசிதமும் அவசியமுங்க.
காலைல, காபி குடிச்சுட்டு வாட்ஸ் அப்ல குட்மார்னிங் மெசேஜ்களை பார்த்துக்கிட்டே வரும்போது, உள்ளூர் குரூப்ல "மாதாந்திர பராமரிப்பு" நிமித்தம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது என்ற தகவல் தட்டுப்படும்.
உடனே, என்ன செய்வோம்? மொபைலுடனே போய் முதலில் தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை ஆன் பண்ணுவோம். பிறகு, மொபைலை குளோஸ் பண்ணி, மிக்ஸியில் அரைக்க வேண்டியதை ரெடி பண்ணுவோம். துணி துவைக்க வாஷிங் மெஷின் போட தடா போடுவோம். இது போன்ற விஷயங்களை சமயோசிதமாக யோசித்து, கடைபிடிப்பதால் டென்ஷன் குறையும்.
சமயோசிதம் என்றால் உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது மட்டுமல்ல. வித்தியாசமாக பதில் சொல்லி எதிரே இருப்பவரை தெறிக்க விடுவதிலும் சேரும். அதிலும் குடும்பத்தலைவிகளின் சமயோசித புத்தி வேற லெவல்.
ஒருமுறை அம்மணியை மொபைலில், அழைத்த ஆண்குரல் "மேடம், நாங்க ஓ எப் சீ பேங்க்ல இருந்து பேசுறோம்" என்றவுடன், "சார், எனக்கு அந்த பேங்க்ல அக்கவுண்ட் இல்லையே"ன்னு அம்மணி சொல்ல,
"ஓ.கே.மேடம், எந்த பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கீங்க.."கேட்க,
பி.பி.பேங்க்லன்னதும் கால் கட்டாகிவிட்டது. சற்று கழித்து, வந்த அழைப்பில், ஒரு பெண் குரல், "மேடம் நீங்க அக்கவுண்ட் வச்சிருக்கிற பி.பி.பேங்க்ல இருந்து பேசறோம்ன்னு சொல்ல,
"மவளே..அது பிளட்பேங்க். உன்னோட தில்லாலங்கடி வேலை என்னிடம் செல்லாது" ன்னு எதிராளியை கடுப்பேத்தி போனை கட் பண்ணிவிட்டாள்.
சமயத்திற்கு ஏற்றாற்போல் பதில் சொல்லி, தானும் தப்பித்து, சூழ்நிலையையும் சுமூகமாக்கியவர்களில் மறக்க முடியாத முக்கியமானவர்கள்,
கிருஷ்ணதேவராயரின் அமைச்சர் தெனாலி ராமர், அக்பரின் மந்திரி பீர்பால். இவர்கள் மாத்தி யோசிப்பதில் வல்லவர்கள். அதனால், பிறருக்கு தீங்கிழைக்காமல் தங்களைத்தானே காப்பாற்றிக்கொள்வார்கள். உதாரணம் ஒன்று சொல்லவா?
ஒருமுறை அக்பர், பீர்பாலை அழைத்து நாட்டில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையை கேட்டார். "அரசே, இப்படி திடுதிப்பென்று கேட்டால் எப்படி சொல்ல முடியும்?" கேட்டார்.
"சரி, நாளை வரை நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் அக்பர்.
மறுநாள் காலை அரசவைக்கு சென்ற பீர்பால் "அரசே... எட்டாயிரத்து நூத்தி எண்பத்தி நாலு பறவைகள் உள்ளன. நீங்கள் எண்ணி முடிப்பதற்குள் சில பறவைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. வெளியிலிருந்தும் நம் நாட்டிற்குள் பறவைகள் வரலாம்." என்று கணக்கெடுக்காமலே சமயோசிதமாக பதில் சொல்லி தப்பித்துக்கொண்டார்.
இந்த செயலை உன்னால செய்ய முடியாது என மனசு பின்னிழுக்கும்தான். வித்தியாசமாக யோசித்து சீக்கிரமாக முடிக்கும்போது நெசமாவே மனசுக்குள் பூச்சட்டியிலிருந்து ஒளிப்பூக்கள் சொரியும். சில நேரங்களில் ஒண்ணும் செய்யாமல் சமயோசிதமாக சும்மா இருக்கும் விவரமான ஜீவன்களும் உண்டு.
சீவக நாட்டு மன்னர் வேட்டைக்கு, மந்திரிகளுடன் கிளம்பினார். போகும்போது, சாப்பிட கட்டு சோத்து மூட்டையும் தயாரானது. வெயிட் அதிகமாயிருக்கவே தூக்குவதற்கு பயந்த மந்திரிகள் பலர் வில், அம்புக்கூடு என எடை குறைவான பொருட்களை வேகமாக எடுத்தனர்.
சுப்புணி மட்டும் எதையும் தொடாமல் அமைதியாக நின்றார். மன்னர் கேட்டதற்கு காரணமாகத்தான் என்றார். கடைசியாக மீதமிருந்த, சோத்து மூட்டையை எடுத்துக்கொண்டார். கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்து, மத்த மந்திரிகள் எகத்தாளம் பண்ணி சிரித்தார்கள். கண்டுக்கவே இல்லை.
காலை சாப்பிட்டதும் பாதி சாதம் காலியாகி பாரம் குறைந்தது. மதியம் சாப்பிட்டவுடன் சோத்து மூட்டையே காலியாகி, சுப்புணி கை வீசி நடந்தார். மற்றவர்களுக்கோ நடந்த களைப்பு கூடியது மட்டுமின்றி, திரும்பும்போது மன்னர் வேட்டையாடிய விலங்குகளையும் சுமந்து தள்ளாடி வர, சுப்புணியை பார்த்த மன்னர், இப்போதான் புரியுது சும்மா நின்ன காரணம் என்றார்.
அட, ஆமாங்க பிரச்னைகள் வரத்தான் செய்யும். சுற்றியுள்ளவங்க குழப்பி, சுத்தவிடத்தான் செய்வாங்க. நாமதான் சமயோசிதமா முடிவெடுப்பதில் தாமதத்தை குறைத்து தகுந்த பாதையில பயணிக்கணும். அப்போ பொங்கிய ஊற்றாய் மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு வலம் வந்து பாடலாம். ஊ...ல...ல்...லா…