
ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட மனிதராக இருப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமல்ல. அப்படி உணர்ச்சிவசப் பட்டவர்களாக இருக்கிறவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதில் இருக்கக்கூடிய ஒரேயொரு சிக்கல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறபோது அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் பாதித்து விடுகிறது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கக்கூடிய முடிவுகள் பெரும்பாலும் தவறாகப் போய்விட்ட வரலாறு நமக்கு உண்டு நாம் படித்த பெருங்கதைகள், இதிகாசங்கள், காப்பியங்கள் இவை எல்லாவற்றிலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கோபத்தின் உச்சியில், ஆத்திரத்தின் கொந்தளிப்பில் இருக்கிறபோது எடுக்கப்பட்ட முடிவுகள். அந்தக் கதை மாந்தர்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு தள்ளியிருப்பதை வரலாற்றின் நெடுகே பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும்கூட நம்மில் பலர் அப்படித்தான் இருக்கிறோம். அதற்கு "வீரம்" என்றொரு பெயர் வைத்துக்கொள்கிறோம். "நான் அப்படித்தான்" என்று சமாதானம் சொல்லப்பார்க்கிறோம்.
குடும்பத்தில், வெளியிடத்தில், நண்பர்கள் மத்தியில் நாம் மாறிப்போவது நமக்கே தெரிவது இல்லை. மற்றொரு பிரச்சனை இதில் இருக்கிறது நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் முடிவெடுக்கிற ஆட்களாக இருக்கிறபோது, நம்மை அடுத்தவர்கள் ஒரு கைப்பாவையைப்போல் எளிதில் மாற்றிவிடமுடிகிறது. கோபத்தின் கொந்தளிப்பில் இருக்கிறபோது இன்னும் கொஞ்சம் தூபம் போட்டால், இவர் நாம் எதிர்பார்க்கிற முடிவை எடுத்துவிடுவார் என்று அவர்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறவர்கள், காரியம் சாதிக்கிறவர்களின் கைப்பாவையாக மாறிப்போவதால், அவர்கள் செய்யும் பல நல்ல விஷயங்களும்கூட நியாயமாக யாருக்கு போய் சேரவேண்டுமோ? அவர்களுக்கு போய் சேருவதற்கு பதிலாக நியாயமில்லாத யாரோ ஒருவருக்கு போய் சேர்ந்துவிடுகிறது.
ஒரு குடும்பத்தினுடைய தலைவனோ, தலைவியோ உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிற ஆளாக இருக்கிறபோது அந்த குடும்பம் நிலை தடுமாறிப்போய்விடுகிறது. இந்த குணம் எதையும் ஆய்ந்து, அறிந்து, பொறுமையாக கையாள வேண்டும் என்ற பக்குவத்தை, அவர்களிடம் இருந்து பிடுங்கிவிடுகிறது. தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கு பதிலாக, நியாயவான்கள்மீது பழிபோடவைக்கிறது.
தகுதியானவர்களுக்கு வாய்ப்பு தருவதற்கு பதிலாக, தன்னலம் சார்ந்த மனிதர்களுடைய சதியில் சிக்க வைக்கிறது. நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை அது தடுத்துவிடுகிறது. அற்புதமான பல மனிதர்களை நம்முடைய வாழ்க்கையிலிருந்து துரத்தி விடுகிறது.
உணர்ச்சிவசப்பட்டு எடுத்த சில முடிவுகளை பின்னாளில் மாற்றிக்கொள்ள முடிந்தாலும் அவை நம்மை கைவிட்டுவிடுகின்றன. சம்பந்தப்பட்டவரிடம் போய் அன்று நான் கோபத்தில் இருந்தேன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். அதனால் தவறான முடிவை எடுத்துவிட்டேன் உங்களை தவறாக பேசிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டாலும்கூட ஏற்படுத்திய காயம் என்பது ஏற்படுத்தியதுதான் அது ஒரு கண்ணாடி டம்ளரை கீழே போட்டுவிட்டு ஒட்ட வைக்க நினைக்கிறேன் ஒரு முயற்சிதான்.
உங்களின் இந்த தவறான குணத்தை கட்டிக்காட்டக்கூடிய மனிதர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள், விமர்சகர்களை அருகில் வைத்துக்கொண்டு, உங்கள் உணர்ச்சி வசப்படும் குணத்தை பாராட்டுகிறவர்களை தூரத்தில் வையுங்கள். காரணம் உங்கள் அருகில் இருந்து விமர்சித்து, உங்கள் நலனுக்காக உழைக்கிற அந்த மனிதர்கள்தான் நல்லவர்கள்.
அவர்கள்தான் நீங்கள் உணர்ச்சி மிகுந்த ஒரு முடிவை எடுக்கிறபோது உடனடியாக உள்ளே வந்து சற்று பொறுமையாக இரு என்று சொல்லுவார்கள். அந்த நல்ல மனிதர்களின் குரலுக்கு காதுகொடுங்கள். உங்கள் குணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள அதுதான் முதற்படியாக இருக்கும்.