
ஒவ்வொரு மனிதனுக்கும் சில குறிப்பிட்ட நேரங்களில் உடல் சக்தியும் உத்சாகமும் அதிகமாக இருக்கும். காலையில் அலுவலகம் செல்லும்போது இருக்கும் சுறுசுறுப்பும் உத்சாகமும் மாலையில் வீடு திரும்பும்போது இருக்குமா?. இதை Peak energy time என்று கூறுவார்கள். இது மூளையின் புத்துணர்ச்சி மனநிலை மற்றும் உடல் சுறுசுறுப்பு ஒவ்வொருவருக்ககும் மாறுபடலாம்.
ஆக்க சிந்தனைகளும், மன ஒருமைப்பாடு தேவைப்படும் வேலைகளை இந்த மாதிரி தொந்திரவற்ற, இயடையூறற்ற, மூளை சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
அடடா, காத்திருக்கும்படி ஆகிவிட்டதே, எவ்வளவு நேரம் வீணாக போகிறது என்று அலுத்துக் கொள்ளுகிறோமே தவிர அந்த நேரங்களை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ரயில் நிலையம், தபால் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் வழியனுப்பவோ, வரவேற்கவோ, பயணத்திற்காகவோ, முன் பதிவிற்காகவோ காத்திருப்பதை தவிர்க்க முடியாது. மருத்துவமனை, அரசு அலுலகம், தியேட்டர் போன்ற இடங்களில் எத்தனையோ மணி நேரங்களை இழக்கிறோம்.
நம் வீட்டிற்கு யாராவதுவருவதாக சொல்லியிருப்பார். ஆர்வமுடனும் சந்தோஷத்துடனும் டிபன் தயாரித்து அவர் 4/மணிக்கு வருவதாக சொன்னாலும் இரண்டு மணியிலிருந்து காத்திருப்போம். அவரோ 5மணிக்கு வருவார்.
இந்த மாதிரி காத்திருக்கும் நேரங்களை ஏன் வீணடிக்க வேண்டும்?. வேலைகளை பட்டியலிடுதல், கணக்குக் குறிப்புகளை எழுதுதல், படிக்காமல் விட்டுப்போன பத்திரிகைகள் படித்தல், தொழில் சம்பந்தமாக பேச்சு வார்த்தைக்கும் போவதாக இருந்தால் அதற்கான குறிப்புகளை தயார் செய்தல் , மனதில் தோன்றும் திட்டங்களையும் கருத்துக்களையும் குறித்து வைத்தல், செல் இருந்தால் தகவல் பறிமாற்றம் செய்து கொள்ளல் என்று எத்தனையோ வேலைகளை இந்த நேரங்களில் செய்து கொள்ளலாமே.
இது மட்டுமா நாம் காத்திருக்கும் இடங்களில் உள்ள வசதிகள், கிடைக்கக் கூடிய பொருட்கள் இவைகளைப் பற்றிய தகவல்களும் சேகரிக்கலாம்.
கண்ட கவலைகளை மனதில் போட்டே புரட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக மூச்சுப் பயிற்சி, மனதை ஒருநிலைப் படுத்துதல், குறுகிய தியான நேரம், பிரார்த்தனை இவைகளை அந்த நேரத்தில் செய்யலாம். காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.