
ஒரு மாணவனுக்கு கல்விப் பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் மூலாதாரம் ஆனவை. இளமையைத் துள்ளித் திரிகின்ற காளைப்பருவம் என்று கூறலாம். இந்தக் காளைப்பருவமே வாழ்வின் காலைப் பருவமாகும். இந்தக் காலைப் பொழுதை நாம் களிப்புடன் மட்டுமல்ல பொறுப்புடன் கழித்தால்தான் நண்பகலை நன்றாகவும், மாலைப் பொழுதை வசதியோடும் கழிக்க இயலும். அதுதான் வாழ்வின் விதைக்கும் காலம் என்று கூறலாம்.
இந்தப் பருவத்தில் "வளவாழ்வுப் பெருமரத்திற்கான வித்தை" அதை நன்றாக விதைத்து அதற்கு நாள்தோறும் நீர்விட்டு வளர்த்து வரவேண்டும். அவ்விதம் செய்பவனே வயதால் இளைஞனாக இருந்த போதிலும் நேரத்தில் முதியவனாக இருப்பான். அவ்விதம் செய்பவனுக்கு இளமை ஓர் அருட்கொடையாக இருக்கும் என்று பேகன் கூறியுள்ளார்.
சிலர் பள்ளி பிராயத்தில் சரியாக படிக்காமல் பின்பு உணர்ந்து படித்து பெரியவர்களான வரலாறு உண்டு. அப்படிப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி பிராயத்தில் சரியில்லாத பையன்களுடன் ஊர் சுற்றி பிற்காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஆக பணியாற்றிய ராபர்ட் கிளைவ்.
இளமைக்காலத்தில் அடங்காத்தனத்துடன் திரிந்து பிற்காலத்தில் அமெரிக்காவின் புகழ்மிகு எழுத்தாளராகத் திகழ்ந்த மார்க் ட்வைன். பள்ளி செல்வதை வெறுத்து தந்தையின் பட்டறையில் பணியைத் தொடங்கி பிற்காலத்தில் யூகோஸ்லாவியாவின் அதிபராக திகழ்ந்த மார்ஷல் டிட்டோ.
அற்பமாகப் படித்தும் ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரியாக மாறிய ஹிட்லர். இலக்கணம் பயில்வதை வேம்பென வெறுத்து பிற்காலத்தில் பரிணாம தத்துவத்தை உலகுக்கு அருளிய டார்வின். படிக்கும்போது பள்ளி ஆசிரியர்களால் 'மடையன்' என்றும் 'மண்டு' என்றும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் கணித மேதையாக திகழ்ந்த க்ளாவியல் ஆகியோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இந்தச் சான்றுகளினால் நாம் அறியும் உண்மை என்ன என்றால் இளம் வயதில் பள்ளிக்கு செல்லாது பள்ளிப்படிப்பை வெறுத்தவர்களும், பள்ளியில் பயிலும்பொழுது வசதியன்று சிறிதளவு அற்ப சொற்பம் படித்தவர்களும், படிப்பு வாசனையற்றவர்களும் சரி பிற்காலத்தில் பொறுப்புணர்ச்சி பெற்றதும் தங்களுடைய அறிவுக்கிளர்ந்திட பெற்றோ, தங்களுடைய அறிவை நூல்களை படிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்தோர் பெருவாழ்வு வாழ்ந்தார்கள் என்பதுதான்.
ஆதலால் 'இளமையில் கல் முதுமையில் வறுமை' என்பதை நினைவுக் கூர்ந்து, மேலே கூறியவர்களின் செயல்பாட்டை நினைத்து, இளமையில் கற்க வேண்டியதை அழகாகக் கற்று, ஆராய்ந்து, தெளிவு பெற்று அதன்படி வாழ்க்கை நடத்த முயலவேண்டும். அதையும் எப்பொழுது தம்மை உணர்ந்து கற்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது அதை கசடற கற்று தெளிந்தால் அதுதான் கல்வியின் சிறப்பு. அதுதான் நம்மை வாழ்க்கையில் அழகாக வழி நடத்தும் என்பது உறுதி.