
பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய குழந்தைகளை இளம் வயதிலிருந்தே நம்பிக்கையுடன் செயல்படுபவர்களாக வளர்ப்பது மிகவும் அவசியமான தொன்று.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் குறை கூறுவதைப் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது தவறான ஒரு செயலாகும்.
'உன் தங்கை உன்னைவிட புத்திசாலி உன்னைவிட அவன் பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்கள் பெற்று விடுவாள். உன்னால் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. நீ பரீட்சையில் தேறுவதே சந்தேகம்! என்பதைப் போன்று சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி வருவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி நாளுக்கு நாள் திட்டு வாங்கும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் நம்பிக்கை அற்றவர்களாக உருவெடுப்பார்கள்.
நெப்போலியன் பள்ளியில் படிக்கும்பொழுது மிகவும் கடினமான கணக்கொன்று அவருடைய வகுப்புக்குக் கொடுக்கப்பட்டது. வகுப்பில் ஒருவரும் அதனைச் சரிவர செய்யவில்லை.
ஆனால் நெப்போலியன் தம் அறைக்குள் சென்று 72 மணி நேரம் ஓயாது முயன்று அக்கணக்கைச் செய்து முடித்து விட்டுத்தான் வெளியே வந்தார். அக்கணக்கு இன்றளவும் 'நெப்போலியன் கணக்கு என்று வழங்கப்படுகிறது.
நெப்போலியன்போல இன்றும் நமது குழந்தைகளிடம் பல திறமைகள் மண்டிக்கிடக்கின்றன. அவைகளை நாம் உற்சாகப்படுத்தி வளர்ப்பதில்தான் குழந்தைகளின் எதிர்காலம் இருக்கிறது.
சில பள்ளி ஆசிரியர்கள் கூட மேலே குறிப்பிட்ட பெற்றோர்களைப் போன்று அதே மாதிரியான தவறுகள் செய்து வருகிறார்கள். 'நீ ஒரு மடையன். குப்பை பொறுக்குவதற்குக் கூட லாயக்கில்லாதவன் உனக்கும் படிப்புக்கும் சம்பந்தமே கிடையாது' என்பதைப்போன்று ஆசிரியர் மாணவனிடம் கூறி வந்தால் அந்த மாணவனுக்குக் கட்டாயம் படிப்பு வராது.
குறை கூறும் பழக்கம் ஒருவன் தன்மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழித்துவிடும். எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளைக் குறை கூறுவதைத் தவிர்த்து அவர்களைப் புகழ்ந்து கூறுவதை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.நீ புத்திசாலி. நீ மனம் வைத்தால் உன்னை யாரும் வெல்ல முடியாது பெரிய படிப்பாளியாகி வாழ்க்கையில் வெற்றி பெறுவாய் எங்களால் முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்யத் தயாராயிருக்கிறோம்!' என்பதைப் போன்று குழந்தை களிடம் பேசி அவர்களை ஊக்குவித்து வரவேண்டும்.
இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் 'என் பெற்றோர்களும், ஆசிரியர்களும் என் திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்படி நான் நடந்து கொள்ளமாட்டேன். அவர்கள் விருப்பப்படி என்னை பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டு அவர்களுக்கு நிறைய மகிழ்ச்சியை தருவேன்' என்று முடிவெடுத்து தங்கள் அறிவையும், திறமையையும் வளர்த்துக்கொள்ளப் பாடுபட்டு, உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஊக்கப்படுத்தும் செயல் ஒருவனை வெற்றியின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்பது உண்மை.