
சகலமும் நன்மைக்கே என்பது நமக்கு நடக்கும் எல்லாமே நன்மைக்குதான் என்று நம்பிக்கையுடன் இருப்பதை குறிக்கும். நம் வாழ்வில் நடப்பவை அனைத்தும் நம்முடைய நன்மைக்காகத்தான் என்று எண்ணினால் எந்த மன உளைச்சலும் ஏற்படாது. கஷ்டமான நேரங்களிலும் இதை மந்திரம்போல் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால்போதும் தேவையற்ற டென்ஷன், விரக்தி, கவலை, சோகம் போன்றவை ஏற்படாது.
எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினால் எப்போதும் மனம் சலனப்படாது, துக்கப்படாது. எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று நினைப்பது ஒரு நல்ல மனப்பான்மை. இது வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்கவும், அத்துடன் எந்த ஒரு செயலையும் நேர்மறையாக அணுகவும் உதவும். இதனால் கடினமான காலகட்டங்களில் கூட நம்மால் எளிதில் அதிலிருந்து வெளி வந்துவிட முடியும்.
எதிர்பாராத சமயங்களில் சில மனதை வருத்தும் செயல்களை எதிர்கொள்ளும்பொழுது நம்பிக்கை ஏற்படவும், வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படவும் இது உதவும். ஆன்மீக ரீதியாக பார்த்தாலும் எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் ஆண்டவன் செயல் என மன அமைதியும், நிம்மதியும் பெறமுடியும். கெடுதலே நடந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுக்கும்.
செய்யும் செயல்களையும், அதற்கான பல்வேறு வழிகளையும் தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருந்தாலும் அதன் விளைவுகள், முடிவுகள் நம் கையில் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகள் நம் கையில் இல்லாத பொழுது ஏற்படும் வெற்றி தோல்விகளை சம நிலையில் வைத்து பார்க்கும் ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுதான் 'எல்லாம் நன்மைக்கே' என்று நினைப்பது.
மனிதன் எண்ணங்களால் வாழ்பவன். தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளும் நல்ல சிந்தனைகள் நிரம்பிய கவசம் தான் அவனை அவன் எண்ணும் இடத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நம்பிக்கை தான் அவனை வழி நடத்தும். விரும்பிய பலன்களையும் தரும். எல்லாம் நன்மைக்கே என்ற மனோபாவம் நமக்கு கிடைக்கும் எதிர்மறை விளைவுகளை சீர்படுத்தவும், விடாமுயற்சி, தன்னம்பிக்கை கொண்டு எடுத்த காரியங்களை தொடர்ந்து முயற்சிக்கவும், சிறப்பாக திட்டமிட்டு முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்லவும் உதவும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். -பகவத் கீதை.