
மனித உறவுகள் மலர்ந்தால்தான் வாழ்க்கைப் பயணத்தில் வசந்தம் வீசும். மனித மனங்களுக்கு இடையே நட்புப் பாலம் அமையவில்லையெனில் வாழ்வின் இனிமை புலப்படாமலேயே போய்விடும்.
மேலும் தனி மனித சாதனை நிகழ்த்தவும் நம்மைச் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு வேண்டும். உடன் பணிபுரிவோர், உற்றார் உறவினர் என நம்மைச் சுற்றியுள்ள நபர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றால்தான் நமது கனவுகளை நனவுகளாக்கலாம்.
ஒரு பேச்சாளனுக்கு அவனது பேச்சைக் கேட்க நபர்கள் வேண்டும்.
ஒரு எழுத்தாளனுக்கு அவனது எழுத்தைப் படிக்க வாசகர்கள் வேண்டும்.
ஒரு ஓவியனுக்கு அவனது ஓவியத்தை ரசிக்க ஆட்கள் வேண்டும்.
இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஊக்கம் கொடுக்க உற்சாகமூட்ட ரசிகர்கள் வேண்டும்.
உற்பத்தியாகும் பொருட்களை வாங்க ஒரு நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அல்லது உடனிருப்போர் மற்றும் உடன் பணிபுரிவோர்.
மனித உறவுகளை மேம்படுத்த நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நட்புப் பாலம் பழுதடையாமல் பராமரிக்க வேண்டும். யாரையும் பிறர் முன்னிலையில் விமர்சிக்கவோ, குறை கூறவோ, புகார் செய்யவோ ஈடுபடாதீர்கள்.
விமர்சனம், குறை, புகார் போன்றவற்றைத் தனிமையில் சம்பந்தப் lபட்டவரிடம் கூறிச் சரி செய்யவேண்டும். பிறர் முன்னிலையில் கூறினால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் அவர் செய்த நல்ல செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பிறர் முன்னிலையில் அவரைப் பாராட்டுங்கள். பலன் கைமேல் கிடைக்கும்.
ஒவ்வொருவருக்கும் சுயகவுரவம், தன்மானம் இருக்கிறது. ஆகவே, ஒவ்வொருவருக்கும் உரிய மதிப்புக் கொடுங்கள்.
அவருடன் உண்மையாக நடங்கள். பாராட்டுதல் என்பது உறவுக்குக் கொடுக்கும் உரம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள், தேவைகள், விருப்பு வெறுப்புகள் உள்ளன. ஆகவே, மற்றவர்களுடன் பேசும்போதும் பழகும்போதும் அவர்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக உங்களால் எவ்வாறு உதவமுடியும் என்று சிந்தியுங்கள்.
ஒவ்வொருவருக்கும் 'தான்' முக்கியமானவர் என்ற ஆழ்மனத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக உங்கள் நடத்தை, வார்த்தை, பழக்கம், உத்தரவு ஆகியவை அமைந்தால் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்காக அவர்களாகவே முன்வருவார்கள். செயலை முடித்துக் கொடுப்பார்கள். மனித உறவுகள் மேம்பட நட்புக்கரம் நீட்டுங்கள்.