உடல் மொழி மூலம் ஆளுமைப் பண்புகளை பிரதிபலிக்க முடியுமா?
உடல் மொழி மூலம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நம்முடைய எண்ணங்களையும், உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எளிதில் வெளிக்காட்ட முடியும். உடல் மொழி மூலம் ஒருவருடைய ஆளுமைப் பண்புகளை ஓரளவு பிரதிபலிக்க முடியும். ஒருவருடைய தோரணை, முகபாவங்கள், சைகைகள் போன்றவை அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்த உதவும்.
ஆளுமைப் பண்பில் நேராக நிமிர்ந்து நிற்பது அல்லது நிமிர்ந்து உட்காருவது தன்னம்பிக்கையையும், நேர்மறையான அணுகுமுறையையும் குறிக்கும். ஒருவர் நிற்கும் தோரணையிலும், நடந்து கொள்ளும் முறைகளிலும், பேசுகின்ற பேச்சிலும் அவர்களுடைய ஆளுமைப் பண்புகள் வெளிப்படும். ஒருவரின் தோரணை ஓரளவுக்கு ஒருவரின் ஆளுமைப் பண்புகளை பிரதிபலிக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
முக பாவனைகள் மூலம் ஆளுமைப் பண்புகளை நம்மால் எளிதில் பிரதிபலிக்க முடியும். ஒருவரைக் கண்டதும் புன்னகை செய்வது நம்முடைய மகிழ்ச்சி மற்றும் நட்பை குறிக்கும். எரிச்சலான முகபாவனைகள் அதிருப்தியையோ, கோபத்தையோ வெளிப்படுத்தும். எனவே முக பாவனைகள் ஓரளவிற்கு நம் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
ஒருவர் பேசும்போது நேராக கண் தொடர்பு கொள்வது அதாவது எதிரில் நிற்பவரின் கண் பார்த்து பேசுவது நம் மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கவும், நம்முடைய நேர்மையை குறித்து ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாக்கவும் உதவுகிறது. கண் தொடர்பு என்பது ஆளுமைத் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண் தொடர்பை தவிர்ப்பது கூச்சத்தையோ அல்லது பொய் சொல்வதையோ குறிக்கலாம். எனவே ஒருவருடன் பேசும்பொழுது கண் தொடர்பு கொள்வது என்பது சிறந்த உடல் மொழியாக பார்க்கப்படுகிறது.
சைகைகள் மூலமும் நம் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தலாம். பேசும்பொழுது கையை உயர்த்தி பேசுவதும், கையை ஆட்டிக்கொண்டு சைகைகள் மூலம் பேசுவதும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் குறிக்கும் வகையில் உள்ளது. அதே சமயம் கையைக் கட்டிக்கொண்டு நிற்பதும், பேசும்பொழுது கையை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆட்டுவதை தவிர்ப்பதும் எதிர்மறையான அணுகுமுறைகளை குறிக்கலாம்.
உடல் மொழி என்பது மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும் உதவும். அதற்காக மற்றவரின் உடல் மொழியை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களைப் பற்றி நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ளவோ, கணிக்கவோ முடியாது.
உடல் மொழியுடன் அவர்கள் பேசும் வார்த்தைகள் மற்றும் சூழலையும் சேர்த்து ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும். சிலர் தன்னிச்சையாகவோ அல்லது தாமாகவோ பிறருடைய உடல் மொழியை பிரதிபலிக்கிறார்கள். இது அவர்கள் பிறருடன் பழகும்பொழுது தானாகவே வந்து விடுவதும் உண்டு.
ஒருவரிடம் பேசும்பொழுது அவர்களின் சொற்கள் அல்லாத உடல் மொழியை கவனியுங்கள். அவர்களின் தோரணை, உடல் அசைவு, குரலின் தொனி மற்றும் கண் தொடர்பு ஆகியவை அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவும். இருப்பினும் உடல் மொழி மட்டுமே ஒருவரது ஆளுமைப் பண்புகளை முழுமையாக பிரதிபலிக்காது.