தோல்வி ஓர் முடிவல்ல: வெற்றியின் படிக்கட்டுகள்!

lifestyle article
Motivational articles
Published on

தோல்வி நிலையென நினைத்தால் -மனிதன் வாழ்வை நினைக்கலாமா? என்பது திரைப்படப் பாடல் வரிகள்! அனுபவப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்று எதுவுமில்லை! நடப்பவை அனைத்துமே வெற்றியின் படிக்கட்டுகள்தான். கீதையும் இதைத்தான் சொல்கிறது. ”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!” அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, எல்லாவற்றையும் பார்த்த அனுபவசாலிகள், கீதையின் பொருளை நன்றாகவே உணர்வார்கள்.

வாழ்க்கை மலர்ப்படுக்கையுமல்ல, வழி நெடுகிலும் முள் உள்ள மோசமான பாதையுமல்ல! அதை நேர்த்தியானதாக ஆக்கிக் கொள்ளும் உபாயம் ஒவ்வொருவரின் உள்ளத்தில்தான் உள்ளது.

“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கே அலைகின்றார் ஞானத்தங்கமே- அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!” என்ற பாடல் பொருள் பொதிந்தது. மனத்தத்துவத்தை விளக்குவது. இருப்பதை விட்டு, இல்லாததைத் தேடியே மனிதன் சிரமப் படுகிறான்! துன்பத்தில் உழல்கிறான்!

நாம் தோல்வி என்று நினைக்கும் எல்லாவற்றிலுமே ஒரு பாடம் இருக்கிறது. ஒரு வழிகாட்டல் இருக்கிறது. அதனை நமக்கு அறிவுறுத்த, நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள் பழமொழிகளாக! அனைத்து எதிர்மறை நிகழ்வுகளிலும் நேர்மறை

யும் ஒளிந்திருக்கிறது. எல்லாமே நமது பார்வையிலும் அணுகுமுறையிலுமே உள்ளன.

உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போமா?

ஒவ்வொரு கெட்ட நிகழ்வின் ஓரத்திலாவது சில நல்லவை ஒட்டிக் கொண்டிருக்கும்! அறிவுள்ளவர்கள் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறி விடுவார்கள்! (Every cloud has a silver lining!-There is good in every bad situation)

ஒரு வழி அடைக்கப்பட்டால், இன்னொரு வழி திறந்தே இருக்கும்! திறந்திருக்கும் வழி மூலம் உள் நுழைந்து தன் விருப்பத்தைச் சாதித்துக்கொள்வான் புத்திசாலி! (When one door closes,another opens-New opportunities always open)

இரவென்றால் பகலொன்று வந்திடுமே! என்பதுதானே உலக இயல்பு! பொறுமையும், நிதானமும்தானே வெற்றிக்காசின் இரு பக்கங்கள்! ((The darkest hour is just before the dawn-Things get better after the worst)

இதையும் படியுங்கள்:
காலம் பொன்னானது: வீணடிப்பதை நிறுத்தி வாழத் தொடங்குங்கள்!
lifestyle article

யானையின் பலம் தும்பிக்கை! மனிதனின் பலம் நம்பிக்கை! தன் மீதும், தன் செயல்களின் மீதும் நம்பிக்கை கொண்ட எவனும் தோற்றதாக வரலாறு இல்லை! (Where there is life,there is hope-As long as you live,there is a chance)

உண்மையும்,விசுவாசமும் கொண்ட ஒருவனை தோல்வியால் வெல்ல முடியாது! (Faith can move mountains-Belief can achieve miracles)

உண்மையான அறிவாளி வெற்றிப் பாதையை அறிந்து முன்னேறினாலும், தோல்வியைச் சந்திக்கவும் தயாராகவே இருப்பான்! (Hope for the best, prepare for the worst- Stay positive, ready to face the opposite)

தூண்டிற்காரனுக்கு மிதப்பின் மேலேயே கண்! வெற்றியாளர்கள் நேர்மறை எண்ணங்களுடன் நேர்மறை வழிகளையே தேர்ந்தெடுத்து முன்னேறுவார்கள். (Keep your face always toward the sunshine-Focus on the positive)

பெருமழை அதிக நேரம் நீடிக்காது! கெட்ட நேரம் தொடர்ந்து வராது! (After rain comes sunshine-Hard times don’t last forever)

கெட்ட நேரங்களே நம் புத்தியைக் கூர்மையாக்கி,நம் செயல்களைத் துரிதப்படுத்தி, நம்மிடம் உள்ள நல்லவற்றை வெளிக்கொணர்கின்றன. (Stars can’t shine without darkness)

இதையும் படியுங்கள்:
எளிமையாக வாழுங்கள் - வலிமையாக மாறுங்கள்!
lifestyle article

கடைசி வரை கடினமாக உழைப்பவர்களைக் கடவுள் கை விட மாட்டார்! உறுதியாக உழைப்பவர்களுக்கு இறுதியில் வெற்றிதான்! (Don’t lose hope until the last breath- There is always another chance)

அப்புறமென்ன? எதற்கு வீணானவற்றை எண்ணி நாட்களை வீணடிக்க வேண்டும் ? நல்லவற்றை நம்பிக்கையுடன் அணுகி, வாழ்வை வளமானதாக்கி, வாழ்ந்து மகிழவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com