
தோல்வி என்பது நிலையற்றது. தோல்வி வந்து விடுமோ செய்கின்ற கார்யம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பய எண்ணத்தை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
சராசரி மனிதர்கள் பலர் "இது சாத்தியம் படாது", கொடுப்பினை இருந்தால் தான் நடக்கும்", இது நடக்கக் கூடியது அல்ல" என்றெல்லாம் கூறுவார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்களில் இருந்து நீங்கள் எப்போதும் விலகியே இருக்க வேண்டும். இதுபோன்ற பிதற்றல்களை அனுமதிக்கக் கூடாது. எந்த காரியத்தைச் செய்ய முற்பட்டாலும் அவற்றைச் செய்யமுடியாமல், செய்யப்படாமல் தோல்விதான் இவர்களின் கண் முன் வந்து நிற்கும்
தோல்விகள் என்று சொல்லும்போது இவர்களுடைய கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளாக இருக்கலாம். அல்லது மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளைப் பார்த்திருக்கலாம். அவர்கள் அடைந்த தோல்விகள் பற்றிய அனுபவங்களை இவர்களிடம் சொல்லியிருக்கலாம். அந்தத் தோல்விகளையே சதா நினைத்து நினைத்து இவர்களுக்குள் பதிய வைத்துவிடுவார்கள். தோல்விகளின் மொத்த உருவாகவே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது. அதிலும் குறிப்பாக எந்த ஒரு பொருளாதார முன்னேற்றத்தையும் அடைய முடியாது. ஒருமுறை தோல்வி வந்தால் மறுமுறையும் வரும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை தோல்வி என்பது உண்மையிலேயே தோல்வி அல்ல.
வெற்றி என்பது தோல்விக்குள்தான் ஒளிந்திருக்கிறது. அதிலும் சில சமயங்களில் சிறு தோல்விக்குள்தான் பெரிய வெற்றியே மறைந்திருக்கும். தோல்வி ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்தால் வெற்றியைக் காணமுடியும். செய்ய வேண்டிய காரியத்தை தெளிவான திட்ட வடிவமைப்போடு செய்யாத காரணத்தால்தான் தோல்வி ஏற்படுகிறது.
சரியான முறையில் சரியாகச் செய்யாததால் தோல்வி வராது. அதே சமயத்தில் தோல்வி வந்தால்தான் அதைத் திருத்திக் கொள்வதற்கான சரியான, முறையான, தெளிவான புதிய வடிவமைப்புகளை கண்டறிய முடியும். புதிய புதிய திட்ட வடிவமைப்புகளக் கொண்டு புதிய பொருளாதார முன்னேற்றத்தை அடையமுடியும். நீங்கள் பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடைய சிற்சில தோல்விகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும். தோல்விகளின் வழியில் பற்பல பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும். ஆகவே, தோல்விகள் நிரந்தரமல்ல.