
நம்மிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து நம்மை ஊக்குவிக்கும் நண்பர்களாக இருந்தாலும் சரி, பெற்றோர்களாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி, அப்படி உள்ளவர்களை நாம் பெற்றிருந்தால் நமக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் நம்மிடம் இருக்கும் திறமை நமக்குத் தெரியும். ஆனால் அதை வெளிக்கொணரும்போது நமக்கு ஊக்குவிப்பாகவும் தென்பான வார்த்தைகள் கூறியும் தைரியம் கூறியும் நம்மை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டுவது நிச்சயமாக உறவுகளோ நட்புகளோதான். வெற்றி பெற்ற மனிதர்களை கேட்டுப்பாருங்கள் என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறாள். என் அம்மா இருக்கிறாள். என் அப்பா இருக்கிறார். என் சகோதரர்கள் இருக்கிறார்கள். என் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யாரையாவது ஒருவரை குறிப்பிட்டுதான் கூறுவார்கள்.
ஒருவர் நன்றாக பாடுகிறார் என்றால் பரவாயில்லை. நன்றாக பாடுகிறாய் நீ ஏதாவது ஒரு டிவி ஷோவுக்கு முயற்சி செய்யலாமே என்று கூறினால் அதுதான் ஊக்கம். நீங்கள் இப்படி கூறும் ஒவ்வொரு வார்த்தையும் திறமைசாலிகளுக்கு உரம் போடுவது போல் அமைந்துவிடும். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஒரு சிறு கதையாக இப்பதிவில்.
ஃபெடரிகோ ஃபெலினி என்பவர் இத்தாலி நாட்டின் தலைச்சிறந்த திரை இயக்குநராக ஜொலித்தவர். தன் வாழ்க்கையை ஆ ர ம் ப க் காலத்தில் சர்க்கஸ் செய்வதிலும், தெருக்கூத்துகளைக் காட்டியும் வாழ்ந்து வந்தார். பின்பு குற்றவாளிகளைக் கண்டறியும் பத்திரிகைச் செய்தியாளராகத் திகழ்ந்தார். பல திறமைகளைக் கொண்டிருந்த பெல்லியின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அவரது திருமணம்.
கியுலியெட்டா மசினா என்ற நடிகையைத் திருமணம் செய்த பின்பு அவரது மனைவி, ஃபெடரிகோ ஃபெலினியின் திறமைகளைக் கண்டறிந்து வழிகாட்டினார். ஒரு பொறுப்பு மிக்க திரை இயக்குநராக ஃபெலினி உருவானார். அவரது எழுத்துத் திறமை மூலம் பல திரைக்கதைகளையும் எழுதினார்.
சமூக மாற்றம், கனவுகள் கலந்த கற்பனைகள், விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்களை இயக்கினார். 1993 ஆம் ஆண்டில் திரைப்பட உருவாக்கத்திற்காக தலைச்சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினை அவர் பெற்றார். தன் இறுதிக்காலம் வரை புகழ் குன்றாமல் விளங்கினார்.
ஒரு மனிதரது திறமைகளைச் சரியான முறையில் கண்டறிந்து, ஊக்கம் பெறும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் உலகில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்ந்திருக்கும். அந்த வாய்ப்பு பெல்லினிக்கு அவரது மனைவி மூலம் கிடைத்தது அவரது அதிர்ஷ்டமே.