
இயற்கையின் படைப்பு எல்லாமே இன்பத்தின் இருப்பிடமாகத்தான் இருக்கிறது. இன்பத்தைப் புரிந்து கொள்வதிலே இன்பத்தை உணர்வதிலே, இன்பத்தை அனுபவிப்பதிலே ஒரு பரிபக்குவ நிலையை அடையாத விடத்துத்தான் துன்பம், துயரம் என்று எல்லாம் எழுகின்றன. புழுக்கமான சூழ்நிலை நிலவுகிறது: உடல் வியர்த்துக் கொட்டுகிறது. அப்பப்பா! காற்றே இல்லை. அதனால் தான் இந்தப் புழுக்கம் என்கிறோம்.
ஒருவர் மின் விசிறியைக் கொண்டு வந்து நம்முன்னே வைத்து இயக்கிவிட்டுச் செல்கிறார். சுகமான காற்று நம் மீது படுகிறது. அப்பப்பா! என்ன சுகம், அருமையான காற்று என்று ஆனந்தப்படுகிறோம்.
காற்று எங்கிருந்து வந்தது? மின் விசிறியா காற்றைக் கொண்டு வந்தது? நம்மைச் சூழ்ந்து கிடக்கும் காற்றை மின் விசிறி சற்று சலனப்படுத்தியது, அவ்வளவுதான்.
அதாவது நமது முயற்சியால் காற்றைப் பயன்படுத்திக் கொண்டோம். முயற்சி காரணமாக துன்பம் என்று கருதிய உணர்வுநிலை மாறிவிட்டது. நமது முயற்சியால் இன்ப நிலையை நாமே உண்டாக்கிக் கொண்டு விட்டோம்.
இன்பத்தை உணராத நிலையும், துன்பத்தைப் பற்றிய அதிகப்படியான நிலையும் இப்படிப்பட்ட ஒன்றுதான் துன்பம், துயரம் என்பன மனித வாழ்க்கையின் இயற்கை நிலையல்ல. அது ஒரு செயற்கையான கற்பனை என்றுதான் கொள்ளவேண்டும்.
திட்டமிட்ட மனித முயற்சியால் துன்பத்தை விரட்டுவது மட்டுமல்ல மீண்டும் அப்படி ஒரு நிலை தோன்றாமலே தடுத்துவிடமுடியும். துன்பம் - துயரம் என்பன அறியாமை காரணமாக தோன்றும் ஒரு பொய்த் தோற்றம்தான்.
வாழ்க்கை குறித்த ஆழ்ந்த ஞானமும் தெளிவும் ஏற்படும்போது அவை தாமாகவே மறைந்துவிடுகின்றன. மனவலிமை குன்றிய மக்களிடம்தான் இந்த துன்பம் - துயரம் பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கிறது.
பல்வேறு வகையான காரணங்களால் மனஆரோக்கியம் குன்றியவர்கள்தான் அதிகமான துன்ப உணர்வுகளுக்கு உட்படுகின்றனர். துன்ப உணர்வுக்கும் துயரநிலைகளுக்கும் காரணம் எதுவாக இருந்தாலும் அதன் நிலைக்களனாகத் திகழ்வது மனம்தான்.
பலர் துன்பம் துயரம் என்று கருதக்கூடியனவற்றை யெல்லாம் சிலர் இன்ப உணர்வாகக் கொண்டு மகிழ்ச்சி கொள்வது உண்டு.
இத்தகையோர்களை இலட்சியவாதிகளின் மத்தியிலே காணலாம். எனவே துன்பம் என்பது எங்கிருந்தோ வந்து நம்மைத் தாக்குவதில்லை. எல்லா வகையில் சுற்றிச் சுழன்று யோசித்தாலும் மனத்தளவே இன்ப துன்பங்கள் அமைகின்றன என்ற அடிப்படை உண்மைதான் நிலைக்கிறது.