ஒரு கையடக்கக் கருவி, காலனை அழைக்கிறது!

Mobile users
Lifestyle article
Published on

டபடத்துச் சென்று செய்திகளைப் புறாக்கள் கொண்டு சென்றது அந்தக் காலம். மனம் படபடக்கப் பல தகவல்களை கைப்பேசிகள் கொண்டு வருவது இந்தக் காலம். வெறும் தகவல் தொடர்புக்காகத்தான் தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதுவே இப்போது பலருக்கு மேலுலகத் தொடர்புக்காக மாறிவிட்டது, வேதனைக்குரியது!

வெறும் தகவல் பரிமாற்றம் என்றால் பரவாயில்லை, ஆனால் ஒரு முழுநீளத் திரைப்படத்தையே கைக்கு அடக்கமான கைப்பேசியில் பார்த்துவிட முடிகிறது என்ற விஞ்ஞான முன்னேற்றம்தான் இன்று பலருடைய வாழ்க்கையில் விபரீதங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

அநிச்சையாக நம் உடல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்க, நம் மனமும், மூளையும் முற்றிலும் இந்தக் கைப்பேசிக்கு அடிமையாகிவிட, நாம் பேரிழப்பைச் சந்தித்துகொண்டிருக்கிறோம்.

ரயில் பாதைகளைக் கடந்து செல்பவர்களில் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஐநூறு பேர் உயிரிழக்கிறார்கள் என்ற தேசிய புள்ளிவிவரம், அதிர்ச்சி தருகிறது. இவர்களில் பெரும்பாலோர் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே ரயில் தண்டவாளங் களுக்கிடையே நடந்து சென்றவர்கள் என்றும் அறியும்போது வேதனை அதிகமாகிறது.

இதையும் படியுங்கள்:
தோல்வியை வெற்றியாக மாற்றும் முயற்சிகள்!
Mobile users

ரயில் பாதையைக் குறுக்காகக் கடக்கும் அவசியம் பலருக்கு சில இடங்களில் ஏற்படத்தான் செய்கிறது. அவ்வாறு கடக்க மேம்பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லாத வசதிக்குறைவு, இப்படி ரயில்பாதையை நடந்துக் கடக்கவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்துகிறது.

அவ்வாறு கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன், ரயில் போக்குவரத்து அந்த வழியில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அதன் பிறகு, விரைவாக, ஆனால் தடுக்கிக்கொண்டு விடாமல் பாதுகாப்பாகச் செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

இச்செயலை, தவிர்க்கமுடியாத அவசரம் என்று ஓரளவு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனலும், கைப்பேசியில் பேசியபடி அல்லது அதைப் பார்த்தபடி ரயில்பாதையைக் கடந்து விபத்தில் சிக்குவதை - அலட்சியம், ஆணவம், தனக்கு எதுவும் நேர்ந்துவிடாது என்ற அகம்பாவம், அப்படியே ரயில் நெருங்கிவிட்டால் துள்ளிச்சென்று தப்பித்துவிடக் கூடிய சமயோசிதம் தனக்கு இருப்பதாகிய கற்பனை என்ற இந்த எதிர்மறை குணங்களால் ஏற்படும் விபத்து என்றுதான் சொல்லவேண்டும்.

ரயில்பாதை என்றில்லை, சாலை விபத்துகளில் பெரும்பாலானவற்றுக்கும் இந்தக் கைப்பேசி பயன்பாடுதான் காரணமாக இருக்கிறது என்பதையும் செய்தித்தாள்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. தலைகுனிந்தபடி கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே செல்பவர்கள் எதிரே வரும் நபருடன் அல்லது வாகனத்துடன் மோதிக்கொண்ட பிறகுதான் விழித்து நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

வேறு சிலர் கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் செலுத்தி தாம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பிறரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள். இதோடு, பொது இடங்களில் உரத்த குரலில் கைப்பேசியில் பேசும் அநாகரிகமும் சேர்ந்து கொள்கிறது.

நடைபாதையில் இவ்வாறு பேசியபடி அல்லது பார்த்தபடி செல்பவர்கள் அங்கே இருக்கக்கூடிய குழியில் விழுகிறார்கள். அல்லது அங்கே படுத்திருக்கும் நாயை மிதிக்கிறார்கள் அல்லது ஏதேனும் அசிங்கத்தில் கால் பதித்து வழுக்கி விழுகிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும் அவர்களால் தங்களைத் திருத்திக்கொள்ள முடிகிறதா? இல்லை. அவர்கள் திருந்த, அவர்கள் வைத்திருக்கும் கைப்பேசி அனுமதிப்பதில்லை. ஒரு தீய வழக்கத்துடன் அறிமுமாகி, அதனுடன் நட்பாகி பழகியும் வந்தால் ஒருநாள் அந்தத் தீயப்பழக்கத்துக்கு முற்றிலும் அடிமையாகிப் போவோம் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தோல்வியை வெற்றியாக மாற்றும் முயற்சிகள்!
Mobile users

கைப்பேசியின் முக்கியத் தேவை என்ன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நடந்துகொண்டோ, வாகனத்தை இயக்கிக்கொண்டோ போகும்போது ஏதேனும் கைப்பேசி அழைப்பு வந்தால், சற்று ஓரமாக ஒதுங்கி, யாருக்கும் பாதிப்பு இல்லாதபடி அந்த அழைப்புக்கு பதில் சொல்லலாம். வீட்டில் ஓய்வாக இருக்கும்போதோ, நெடுந்தூர பேருந்து அல்லது ரயில் பயணத்தின்போதோ விளையாட்டு, பாட்டு, திரைப்படம் என்று நெடுநேர பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.

ஆபத்து மிகுந்த சூழலில் கைப்பேசியைப் பயன்படுத்தி, விபத்து ஏற்பட்டுவிட்டால், உடனிருப்பவர்கள் உதவிக்கு வரமாட்டார்கள், ஆனால் தத்தமது கைப்பேசியால் அந்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்துகொண்டிருப்பார்கள் என்ற இரக்கமற்ற தற்போதைய யதார்த்தத்தை மட்டும் கைப்பேசி அடிமைகள் புரிந்துகொண்டால் போதும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com