

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி.அகம் அழகாக இருந்தால், முகம் அந்த அழகைப் பிரதிபலிக்கும் என்பதே இதன் பொருள். இப்படித்தான் எப்போதும் இருக்கவேண்டும் என்கிற அவசிய மில்லை. முகத்தை எப்போதும் புன்முறுவலுடன் வைத்துக் கொள்ளப் பழகிவிட்டால் அதுவே காலப்போக்கில் அகத்தையும் அழகுபடுத்திவிடும்.
கவலைகளை எப்போதும் முகத்தில் சுமந்து கொண்டு இருப்பவர்களால் வாழ்க்கையின் இனிமையை ஒருபோதும் கேட்க முடியாது. பிரச்னைகளே இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் பிரச்னைகளைத் தங்கள் முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டால் அப்படிப் பட்டவர்களுடன் மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடுவதற்குத் தயங்குவார்கள். ஆகவே முகத்தில் புன்னகை இருப்பதே ஒரு கவர்ச்சி.
புன்னகையுடன் காட்சியளிக்கின்றவர்களுக்குக் கவலையே இல்லையென்று அர்த்தமில்லை. தங்கள் கஷ்டங்களை இவர்கள் முகத்தில் காட்டிக் கொள்வது இல்லை என்பதுதான் உண்மை. புன்னகையுடன் காட்சி தருவதற்கு பழகிக்கொள்ளலாம். சிரிப்பு வராமல் சிரித்த பாவத்தை முகத்தில் ஏற்படுத்திக் கொள்வது என்று இதற்கு அர்த்தமில்லை. பிரச்னைகளைத் தீர்ப்பது என்பது வேறு. பிரச்னைகளின் உணர்ச்சி விளைவுகளை எப்போதும் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டு இருப்பது என்பது வேறு.
மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை என்பதால் அதை நம்மால் எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்திக்கொள்ள முடியும், எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பார்ப்பது ஒரு மனநிலை. இதை ஏற்படுத்திக்கொண்டுவிட்டால் முகத்தில் புன்னகை தானாகவே தோன்றிவிடும். இப்படி ஒரு மனோபாவத்தை உருவாக்கிவிட்டால் அந்த மகிழ்ச்சியின் காரணமாக அகம் அழகாகிவிடும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைவிட முகத்தின் அழகு அகத்திலும் நிறையும் என்பதுதான் வாழ்க்கை அணுகுமுறையாக இருக்க வேண்டும். பார்க்கின்றவர்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தப்பழகிக் கொண்டுவிட்டால் முகத்தோற்றம் புன்னகை அழகுடன் மிளிர ஆரம்பிக்கும்.
மகிழ்ச்சித் தோற்றத்திற்கு எல்லோரையும் வசீகரித்து விடும். நம் தோற்றத்தில் உள்ள மகிழ்ச்சியின் காரணமாக நம்மைப் பார்க்கின்றவரிடமும் எளிதில் மகிழ்ச்சி ஏற்பட்டு விடும் . மகிழ்ச்சியான உணர்வு சுறுசுறுப்பாகச் செயல்பட வைப்பதோடு, சிந்தனையினை வேகப்படுத்தி எண்ணங்களுக்கு வலிமையினைத் கொடுக்கிறது. மற்றவர்களையும் நம்மை விரும்பச் செய்கிறது.
வாழ்க்கைக்குச் சுருதி சேர்க்கின்ற ஒன்றுதான் மகிழ்ச்சி மனநிலை யாகும். இது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
அப்போதுதான் வாழ்க்கை என்ற கச்சேரி இனிமை குறையாமல் நடைபெறும். எதையும் இரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் ஒரு பாரமாக இருக்காது. உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக மகிழ்ச்சி இருப்பதால், சோர்வின்றி வேலை செய்கின்ற சக்தியினை மகிழ்ச்சியால் மட்டும்தான் கொடுக்க முடியும். மனத்தை மகிழ்ச்சியில் நிரப்பக் கற்றுக்கொடுக்க முடியும்.
எனவே, மனத்தை மகிழ்ச்சியில் நிரப்பக் கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும் என்பதை உணர்வீர்கள்.