
ஒன்றை செய்யத்தொடங்குவதற்கு முன்பே இது நடக்காமல் இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நம்புவது நம் பழக்கம்தான். இந்த பழக்கம், வழக்கமாக மாறினால் பிரச்னை பெரிதாகிவிடுகிறது. இன்றைக்கு பலபேர் தொழில் உள்ளிட்ட விஷயங்களைத் தொடங்காமல் இருப்பதற்கு, இதுபோன்று 'நடக்காது' என்கிற எண்ணம்தான் காரணம்.
ஒரு தொழிலைத் தொடங்க தேவைப்படக்கூடிய தகுதி, அறிவு, சூழ்நிலை, பணம், வாய்ப்பு, உதவி என பல விஷயங்கள் இருந்தாலும், தயங்கித் தயங்கி நின்று கொண்டேயிருக்கக்கூடிய மனிதர்கள் தனக்கு சாதகமாக எதுவும் நடக்காது என்கிற எண்ணத்தில் இருக்கிற காரணத்தினால்தான் சப்பைக்கட்டு காரணங்களை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை நம்மால் செய்யமுடியும் என்று நம்பிவிட்டால் அதை செய்வதற்குத் தேவையான அவசியமான விஷயங்களை நம்மால் பெறமுடியும். தன்னால் தொழிலில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறவர்கள் அதற்கான முயற்சிகளை தொடர்கிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் எந்த டாக்குமென்டிலும் கையெழுத்திட மாட்டார். கேட்டால், நான் ராசியில்லாதவன் என்று சொல்லுவார். அவரது மனைவியோ சமீபத்தில் ஒரு தொழில் தொடங்குகிறபோது "நீங்கள் கையெழுத்திட்டு இந்தத் தொழிலைத் தொடங்குங்கள்”, என வலியுறுத்தினார், முடியவே முடியாது' என்று அவர் ஒற்றைக்காலில் நின்றார். மனைவியும் ஒற்றைக்காலில் நிற்கவே வேறு வழியில்லாமல் அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு தொழிலைத் தொடங்கினார்.
அவர் என்னால் முடியாது, எனக்கு ராசியில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தார். அவருடைய மனைவியோ 'உண்மையிலேயே உங்களுக்கு ராசியில்லாமல் இருக்குமென்றால், இந்தத் தொழில் தோற்றுக்கூடப் போகட்டும் கவலையில்லை. ஆனால் நீங்கள் ராசிக்காரர்தான். நீங்கள் ராசிக்காரர் என்று நம்புகிறபோது உங்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தனையும் கிடைக்கும் என்பதை நிரூபிப்பதற்காக தொழிலை நாம் நடத்தவேண்டும்' என்று, அவரும் துணை நின்று அந்தத் தொழிலை நடத்தினார். மிகப்பெரிய அளவிற்கு இரண்டு பேருமே வெற்றி பெற்றார்கள் அவர் அந்த நிலையில் இருந்து வெளியே வந்தார். அந்த மனநிலையில் இருந்து வெளியே வராத பட்சத்தில் முயற்சி செய்தல் என்ற பெரும் விஷயமே வாழ்வில் தடைபட்டு போகிறது.
படிக்கிற மாணவர்கள், பணியில் இருக்கிறவர்கள், வேலைக்குப் போகிறவர்கள், தொழில் தொடங்குகிற வர்கள் என எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய ஓர் இயல்பான விஷயம். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயம் நடக்காமல் போவதற்கு எவ்வளவு சாத்தியக்கூறுகள் உண்டோ அதே அளவுக்கு, இன்னும் சொல்லப்போனால், அதை விட அது நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்
நடக்கும் என நினைக்கும்போது அந்த நம்பிக்கை முதலில் உத்வேகத்தைத் தரும், அந்த நம்பிக்கை செயல்பாட்டைக் கொடுக்கும். அந்த நம்பிக்கை வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடித்து உங்கள் காலடியில் கொண்டுவந்து போட்டுவிட்டு போகும். உங்கள் வேலை அதை எடுத்து செய்வது மட்டும்தான். ஆகவே முதலில் நடக்கும் என நம்புங்கள்.